×

மாரடைப்பால் சரிந்தார் ராகுல் நடை பயணத்தில் காங். தலைவர் மரணம்

மும்பை: பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் மகாராஷ்டிராவுக்கு அவர் வந்து சேர்ந்தார். நான்டெட்டில் உள்ள தெக்லூர் பகுதிக்கு வந்த அவரை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பேரணி தொடர்ந்தது. நேற்று காலையில் மீண்டும் நடைபயணம் தொடங்கியது.

இந்த யாத்திரையில் காங்கிரஸ் சேவாதள பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார் பாண்டே பங்கேற்றார். நடைபயணத்தில் பங்கேற்ற அவர், நடந்து செல்லும்போதே திடீரென சுருண்டு விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். யாத்திரையில் கட்சி கொடியை ஏந்தியபடி பாண்டே நடந்தார். அவருடன் மூத்த தலைவர் திங்விஜய் சிங்கும் இருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கிருஷ்ண குமார் பாண்டேயின் மரணம் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினர், கட்சியினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறுதி மூச்சு வரை கொடியேந்தி வந்தார். நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு உணர்வு எப்போதும் நமக்கு ஊக்கம் தருவதாக அமையும்,’ என கூறியுள்ளார்.



Tags : Kang , Collapses of heart attack, Rahul walks, Cong. Leader, death
× RELATED திரிணாமுல் காங். வேட்பாளர் மஹுவா...