தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் தென்மேற்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் வட மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துள்ளபடி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிமீ உயரம் வரை காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்.பின்னர் அது வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு இன்று வரும் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இதன்படி 9ம் தேதி இடி மின்னலுடன் லேசான மழையாக பெய்யத் தொடங்கி, கனமழையாக பெய்யும். 10ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 11ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இன்று தொடங்கி, பெய்யும் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 7 செமீ முதல் 21 செமீ வரையும், சென்னையில் 7 செமீ முதல் 10 மிமீ, காஞ்சிபுரம் 12 செமீ முதல் 22 செமீ, வேலூர் 9 செமீ முதல் 23 செமீ, விழுப்புரம் 14 செமீ முதல் 20 செமீ, கடலூர் 15 செமீ முதல் 24 செமீ  வரையும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: