×

சென்னையில் நீர்நிலைகளின் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச கொசு வலை: குடும்பத்திற்கு ஒன்று வீதம் 2.6 லட்சம் விநியோகம்; அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு வழங்கினர்

சென்னை: கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க நீர்நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு 2,60,000 கொசு வலைகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு வழங்கினர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொது மக்களுக்கு கொசுக்களினால் ஏற்படும் நோய்களை தடுக்கும் விதமாக விலையில்லா கொசு வலைகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

ராயபுரம் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி, ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் சங்கர்லால் குமாவத், நகரமைப்பு குழுத் தலைவர் இளையஅருணா, சுகாதாரக் குழுத் தலைவர் சாந்தகுமாரி, துணை ஆணையர்கள் பிரசாந்த், சிவகுரு பிரபாகரன், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் வேளாங்கண்ணி, ராஜேஷ் ஜெயின் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்காலங்களில் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 3,278 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 224 கைத்தெளிப்பான்கள், 120 விசைத்தெளிப்பான்கள், 224 கையினால் எடுத்து செல்லக்கூடிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 67 புகைப்பரப்பும் வாகனங்களை கொண்டு கொசுத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே மழைநீர் தேங்கும் இடங்களில் தேவையற்ற பொருட்களை அகற்றும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரை அட்டவணை தயாரிக்கப்பட்டு, கொசுத் தடுப்பு பணிகள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க நீர்வழித்தடங்களின் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடும்பத்திற்கு ஒன்று வீதம் 2,60,000 கொசு வலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைக்கும் விதமாக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோர் நேற்று கொசு வலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தொடர்ந்து, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட உள்ள கொசு ஒழிப்புப் பணிகளை தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டனர்.

* 3,278 களப்பணியாளர்
* 224 கைத்தெளிப்பான்
* 120 விசைத்தெளிப்பான்
* 67 புகை பரப்பும் வாகனங்கள்
* 8 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள்
* 224 புகை பரப்பும் இயந்திரங்கள்

Tags : Chennai ,Ministers ,Nehru ,Shekharbabu , Free mosquito nets for public living near water bodies in Chennai: Distribution of 2.6 lakh per household; Presented by Ministers Nehru and Shekharbabu
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...