×

காதலித்து திருமணம் செய்த மொராக்கோ நாட்டு பெண் நகை, பணத்துடன் ஓட்டம்: போலீசில் சென்னை கணவர் புகார்

சென்னை: காதலித்து திருமணம் செய்த மொராக்கோ நாட்டு பெண், 6 ஆயிரம் யூரோ, ரூ.60 ஆயிரம் பணம், 10 சவரன் நகைகளுடன் தப்பி ஓடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (52). இவர், கடந்த 2021ம் ஆண்டு மொராக்கோ நாட்டிற்கு வேலைக்கு சென்று இருந்தார். அப்போது அந்நாட்டை சேர்ந்த ஹிலாலி ஹஸ்னா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிறகு இருவரும் மொராக்கோ நாட்டின் வழக்கப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னை திரும்பினர். பின்னர் தனது காதல் மனைவியுடன் அப்துல் மாலிக் வாழ்ந்து வந்தார். ஆனால், மொராக்கோ நாட்டின் காதலிக்கு சென்னையை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, தனது கணவரிடம் மொராக்கோ நாட்டிற்கே சென்று விடலாம் என்று கூறி வந்துள்ளார். அதற்கு அப்துல் மாலிக் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கடந்த 6ம் தேதி அப்துல் மாலிக் வேலை தொடர்பாக வெளியே சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவி ஹிலாலி ஹஸ்னா மாயமாகி இருந்தார். அவரை போனிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் மாலிக் சந்தேகத்தின்படி வீட்டின் பீரோவை சோதனை செய்துள்ளார்.

அப்போது, பீரோவில் வைத்திருந்த 6 ஆயிரம் யூரோ, இந்திய பணம் ரூ.60 ஆயிரம், 10 சவரன் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், மனைவியின் பாஸ்போர்ட் மாயமாகி இருந்தது. உடனே அப்துல் மாலிக் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தனது வெளிநாட்டு மனைவி பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுவிட்டார். அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் மாயமான மொராக்கோ நாட்டு பெண் ஹிலாலி ஹஸ்னா சொந்த நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டாரா என்பது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai , Moroccan woman who fell in love and married, runs away with jewelry: Chennai husband complains to police
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...