ஆசர்கானா சந்திப்பு சாலையில் கூத்தாடும் வாகனங்கள்

ஆலந்தூர்: ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் சாலைக்கு செல்லும் ஆசர்கானா சந்திப்பு சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சென்னையிலிருந்து ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பட்டு, கோவிலம்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், கிழக்கு தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு பைக், கார், லாரி, வேன் போன்ற வாகனங்களில் செல்வோர் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையிலிருந்து ஆசர்கானா சந்திப்பு சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலை கடந்த 6 மாதங்களாக மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் செல்லும்போது வாகனங்களை ஓட்டுவது சிரமாக உள்ளதாக டிரைவர்கள் குமுறுகின்றனர். பல்வேறு இடங்களில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் ஆசர்கானா சாலையை மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு பகல் என அணிவகுத்து செல்கின்றன. ஆனாலும், மாநகராட்சியோ, கன்டோன்மென்ட் நிர்வாகமோ, நெடுஞ்சாலை துறையோ கண்டு கொள்வதே இல்லை. இங்குள்ள பள்ளங்களில் கட்டிடக் கழிவுகளையாவது கொட்டி நிரப்ப வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: