நிலங்களை அபகரிக்க ரியல் எஸ்டேட்காரர்களுடன் சேர்ந்து முறைகேடு செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூரில் என் மனைவிக்கு 16,104 சதுர அடி நிலம் உள்ளது. 19,622 சதுர அடி நிலத்துக்கு என்னிடம் பொது அதிகாரம் உள்ளது. இந்த நிலங்களுக்கு 1976ம் ஆண்டு தாய் பத்திரம் உள்ளது. ஆனால், யாரோ கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த பத்திரத்தை செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் எஸ்.ராஜா ரத்து செய்துள்ளார். ரியல் எஸ்டேட் மாபியா, நில அபகரிப்பு கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து பலரின் நிலங்களை அபகரிக்க துணை போகியுள்ளார். இதன் மூலம் பல கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே, பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.மனோகரன் ஆஜராகி, 100 ஆண்டுகள் பழமையான சொத்துப் பத்திரங்களை எல்லாம் செல்லாது என்று பதிவாளர் ராஜா அறிவித்துள்ளார். நாவலூரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு அருகே உள்ள மதிப்புமிக்க நிலங்களின் பத்திரங்களை எல்லாம் செல்லாது என்று அறிவித்துள்ளார் என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட பதிவாளர் எஸ்.ராஜா மீது பல புகார்கள் இதுபோல வந்துள்ளதால் உதவி ஐ.ஜி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த குழு புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று அறிக்கை கொடுத்துள்ளது. அதன்படி, பதிவாளர் எஸ்.ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், சொத்து குறித்து வந்த புகார்களில் பலவற்றில் புகார்தாரரின் முகவரி, கையெழுத்து இல்லை. ஆனால், இதுபோன்ற மொட்டை புகாரின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, 30 முதல் 90 ஆண்டுகளுக்கு முன்புள்ள பத்திரங்களை எல்லாம் போலியானது, செல்லாது, பதிவு செய்ய உகந்தது இல்லை, நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்றெல்லாம் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பழமையான பத்திரங்கள் எல்லாம் புராதன ஆவணங்களாகும். அப்படிப்பட்ட பத்திரங்களை எல்லாம் இவர் செல்லாது என்று அறிவித்துள்ளார்.

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நிலங்கள் எல்லாம் அதிக விலை மதிப்புள்ளவை. இந்த நிலங்களை  நில அபகரிப்பாளர்களுடன் அதிகாரி கைகோர்த்து ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக உரிய புலன்விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியில் வரும். இவர், நிலத்தின் மீது வில்லங்கத்தை உருவாக்கி, உண்மையான நிலத்தின் உரிமையாளர்கள் எல்லாம் நிலங்களை விற்பனை செய்ய வைத்துள்ளார். எனவே, இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களை கொண்டு சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories: