திருவொற்றியூர் மணலி நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததால் தொடரும் விபத்துகள்: அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் புகார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மணலி நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னையில் இருந்து எர்ணாவூர் மேம்பாலம் வழியாக மணலி சாலையை கடந்து மாதவரம், மணலி, மணலி புதுநகர், பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு தினமும் கன்டெய்னர் லாரிகள், மாநகர பேருந்துகள், கார், மோட்டார் சைக்கிள்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், சத்தியமூர்த்தி நகரில் இருந்து சாத்தாங்காடு காவல் நிலையம் வரை மணலி சாலையில் தெரு மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது இருளில் ஒன்றோடு ஒன்று உரசி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல நாட்களாக எரியாமல் உள்ள மின்விளக்குகளை பழுது பார்த்து சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பலமுறை திருவொற்றியூர் மண்டல தெருவிளக்கு மின் பிரிவு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் பல்வேறு காரணங்களை கூறி நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது இந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த ஒரு தம்பதியினர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. உடனே பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அந்த இருவரையும் மீட்டு தண்ணீர் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக அப்போது பின்னால் கனரக வாகனங்கள் ஏதும் வராததால் இருவரும் உயிர் தப்பினர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘மணலி சாலையில் உள்ள மின்விளக்குகளை திருவொற்றியூர் மண்டல தெருவிளக்கு அதிகாரிகள் சரியாக பராமரிப்பதில்லை. இதனால் எப்பொழுது பார்த்தாலும் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. சாலையில் எதிரில் வருகின்ற வாகனம் எதுவும் தெரியவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் பக்கிங்காம் கால்வாயில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அவல நிலை உள்ளது. திருவொற்றியூர் மண்டலத்தில் தெரு விளக்கு பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் இருந்தும் அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் இங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி ஆணையர் இந்த பகுதியில் தடை இல்லாமல் மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுப்பதோடு அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: