×

மாஸ்கோவில் ஜெய்சங்கர் பேட்டி இந்தியா-ரஷ்யா உறவு வலுவானது

புதுடெல்லி: ‘இந்தியாவும், ரஷ்யாவும் விதிவிலக்கான நிலையான நீண்ட கால உறவை கொண்டுள்ளன,’ என மாஸ்கோவில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றார். ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தொடங்கிய பிறகு, ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் ரஷ்ய பயணம் இது.மாஸ்கோவில் நேற்று அவர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார்.

பின்னர், இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் ஜெய்சங்கர் கூறியதாவது: கொரோனா தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள் ஆகியவை உலக பொருளாதாரத்தை பாதித்துள்ளன. இவற்றோடு உக்ரைன் போரின் விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். இதுமட்டுமின்றி தீவிரவாதம், பருவநிலை மாற்றம் போன்ற வற்றாத பிரச்னைகளும் உள்ளன. இவை நமது முன்னேற்றத்தையும், செழிப்பையும் சீர்குலைத்து வருகின்றன. இன்றைய எங்கள் சந்திப்பு உலகளாவிய பிரச்னைகள் மற்றும் குறிப்பிட்ட பிராந்திய கவலைகளை நிவர்த்தி செய்யும். இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு விதிவிலக்கான நிலையான மற்றும் நீண்ட கால வலுவான உறவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்
உக்ரைன் போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு பல வகையிலும் சாதகமாக உள்ளது. எனவே, இது இனியும் தொடரும்,’’ என்றார்.

Tags : India ,Russia ,Jaishankar ,Moscow , India-Russia ties strong, says Jaishankar in Moscow
× RELATED ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த...