×

வங்கதேச லெவனுக்கு எதிராக தமிழ்நாடு மீண்டும் வெற்றி: ஷாருக்கான் அபார சதம்

சென்னை: இந்தியா வந்துள்ள வங்கதேசம் லெவன் ஆண்கள் அணி  தமிழ்நாடு அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் தமிழக இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்கு வந்தது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஷாருக்கான் 100 ரன்னுடன் (69 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார். சாய் சுதர்சன் 40, சதுர்வேத் 26, கேப்டன் பாபா இந்திரஜித் 20 ரன் எடுத்தனர். தமிழகத்துக்காக விளையாடும் வெளிமாநில வீரர்களான லக்மேஷா 42, சஞ்ஜெய் யாதவ் 39 ரன் விளாசினர்.  வங்கதேசம் தரப்பில்  காலீத் அகமத் உட்பட 4 வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 47 ஓவரில் 307 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் லெவன் களமிறங்கியது. ஆரம்பத்தில் தட்டுத் தடுமாறினாலும் சாயிப் ஹஸன் 30, அனமல் ஹக் பிஜோய் 24 ரன் எடுத்தனர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த தவஹித் ஹிர்தய் 73, ஜாகீர் அலி 36 ரன் எடுத்திருந்தபோது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்கதேசம் 40 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்திருந்தது. அந்த அணி எஞ்சிய 7 ஓவரில் அதாவது 42 பந்துகளில் 113 ரன் எடுக்கவேண்டி இருந்தது.

மீண்டும் ஆட்டம் தொடர்வதற்கான சூழல் இல்லாததால், உள்நாட்டு போட்டிகளில் கடைபிடிக்கப்படும் வி.ஜெயதேவன் (விஜேடி) விதிமுறைப்படி தமிழ்நாடு 50 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. வங்கதேசம் லெவன் அணிக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு தரப்பில் ரகுபதி சிலம்பரசன் 2, மணிமாறன் சித்தார்த் உட்பட 3 பேர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த 2 அணிகளுக்கு இடையிலான அடுத்த 2 ஆட்டங்கள் நவ.10, நவ.11ல் பகல்/இரவு ஆட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Bangladesh XI ,Shah Rukh Khan , Tamil Nadu win again against Bangladesh XI: Shah Rukh Khan hits a huge century
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...