ஞானவாபி மசூதி சிவலிங்கம் வழிபாடு வரும் 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

வாரணாசி: ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை விரைவு நீதிமன்றம் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் பக்கவாட்டு சுவரில் உள்ள அம்மன் சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு சிவலிங்கம் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, விஸ்வ வேத சனாதன சங்கத்தின் பொதுச் செயலாளர் கிரண் சிங், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ‘முஸ்லிம்கள் ஞானவாபி மசூதிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும், வளாகத்தை சனாதன சங்கத்திடம் ஒப்படைத்து, சிவலிங்கத்தை வழிபட அனுமதி தர வேண்டும்,’ என வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மகேந்திர பாண்டே, தீர்ப்பை நவம்பர் 8ம் தேதி அறிவிப்பதாக கடந்த மாதம் 27ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி மகேந்திர பாண்டே விடுமுறையில் இருப்பதால் வரும் 14ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட உதவி அரசு வக்கீல் சுலப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: