வேட்புமனு தாக்கல் விவகாரம் ஆளும் பாஜகவின் கோரிக்கை நிராகரிப்பு: தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: பொது விடுமுறை நாளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி ஆளும் பாஜகவின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 12ம் தேதி பொது விடுமுறை நாள் (இரண்டாவது சனிக்கிழமை) என்பதால், அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வேட்பு மனு தாக்கலை ஏற்க வேண்டும் என்று ஆளும் பாஜக தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.

இந்நிலையில் குஜராத் பாஜகவின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தல் விதிமுறைகளின் பொது விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் பெறப்படாது. 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் இருப்பதால், அந்த நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்கப்படாது’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ் கூறுகையில், ‘தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எங்களுக்கு தகவல் எதுவும் வரவில்லை’ என்றார்.

Related Stories: