×

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட பாலதண்டாயுதபாணி உலோக சிலை குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு

கும்பகோணம்: கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட பாலதண்டாயுதபாணி உலோக சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் உலோகச்சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என்று ஏமாற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி மற்றும் ஐஜி தினகரன் ஆகியோர் உத்தரவுப்படி எஸ்பி ரவி மற்றும் திருச்சி சரக கூடுதல் எஸ்பி பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் டிஎஸ்பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, எஸ்ஐ ராஜேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோவை மாநகராட்சி உக்கடம் செல்வபுரம், யோக சாஸ்தா கார்டனில் பழைய தொன்மையான சிலைகள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சோதனை செய்தனர். அப்போது பழமையான பாலதண்டாயுதபாணி உலோகசிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உலோகசிலை சம்பந்தமாக அங்கிருந்த சிங்கராயர் மகன் பாஸ்கர்(42) என்பவரிடம்  விசாரித்தனர். விசாரணையில், அவர் பாலதண்டாயுதபாணி உலோகச்சிலையை அவரது பொறுப்பில் வைத்திருப்பதாகவும், அதற்கென எந்தவொரு ஆவணங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார். யாரிடமிருந்து பெறப்பட்டது என்பது குறித்த எவ்வித தகவலும் தெரிவிக்காததாலும், ஆவணங்களும் சமர்ப்பிக்காததாலும் 300 கிலோ எடையான உலோகச்சிலையை கைப்பற்றி கோவை சிலை திருட்டு தடுப்பு பிரிவுஅலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் சிலைக்கடத்தல் பிரிவு போலீசார் கைப்பற்றிய பாலதண்டாயுதபாணி உலோகச்சிலையை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா, உலோகச்சிலையின் தொன்மைதன்மையை இந்திய தொல்லியல்துறை அறிய வேண்டியுள்ளதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டது.

Tags : Paladanda ,Coimbatore ,Juvenile Court , Metal statue of Paladanda weapon seized in Coimbatore handed over to Juvenile Court
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...