×

வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில் இன்று கொண்டாடப்பட்ட “தமிழ் அகராதியியல் நாள் விழா“

சென்னை: தமிழ் அகராதியியல் நாள் விழா -2022! தமிழ்வளர்ச்சி மற்றும்செய்தித்துறை அரசு செயலாளர் முனைவர் ம.சு. சண்முகம் இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று விருதுகளை வழங்கினார்!

“தமிழ் அகராதியியலின் தந்தை“ என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பர் 8ஆம் நாளைத் “தமிழ் அகராதியியல் நாள் விழா“வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தால், “தமிழ் அகராதியியல் நாள் விழா“ கொண்டாடப்பட்டுவருகிறது.

அந்தவகையில் 2022 ஆம் ஆண்டுக்கான “தமிழ் அகராதியியல் நாள் விழா“ சென்னை, தரமணியில் அமைந்துள்ள “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்“ 08.11.2022ஆம் நாள் காலை சிறப்புற நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலுள்ள, பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முதலமைச்சரின் செயலாளரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளருமாகிய முனைவர் ம.சு. சண்முகம் இ.ஆ.ப., பங்கேற்று, 2021 ஆம் ஆண்டுக்கான ”தூயதமிழ்ப் பற்றாளர் விருது“, “தூயதமிழ் ஊடக விருது“, ”நற்றமிழ்ப் பாவலர் விருது” ஆகிய விருதுகளை வழங்கி, 58அறிஞர்களின் கருத்துச் செறிவார்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான “அகராதி ஆய்வு மலரை“ வெளியிட்டு முன்னிலையுரையாற்றிச் சிறப்பித்தார்.

முதலமைச்சரின் செயலாளரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளருமாகிய முனைவர் ம.சு. சண்முகம் இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தஞ்சை - தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். விழாவில், அகராதியியல் அறிஞர் முனைவர் கு. அரசேந்திரன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்  தலைவர் திரு. வி.ஜி. சந்தோசம், கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் முனைவர் மதன் கார்க்கி உள்ளிட்ட தமிழாளுமைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் வரவேற்புரை வழங்க, விழாவின் நிறைவில் தமிழ்வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந. அருள் நன்றியுரை கூறினார்.

விழாவின் தொடக்கமாக, காலை 9.30 -10.30 வரை, மயூரி நிகழ்த்துக் கலைக்கழகம், கலைமாமணி விசயலட்சுமி பூபதி வழங்கும் “எங்கும் தமிழ்!“ கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில்,  அரசு அலுவலர்கள், அகராதியியல் வல்லுநர்கள், விருதாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவ-மாணவியர் மற்றும் தமிழார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விழாவில் விருதுபெற்றோர் விவரங்கள்
அ)  தூய தமிழ்ப் பற்றாளர் விருது -2021

வ.எண்    மாவட்டம்    விருதாளர்கள்    
1.    செங்கல்பட்டு    ”வாசல்” எழிலன் (எ) சு. கந்தசாமி    
2.    சென்னை              தாமரைப் பூவண்ணன் (எ)  க. கோவிந்தராசு    
3.    தருமபுரி             பாவலர் பெரு.முல்லையரசு    
4.    திண்டுக்கல்     பண்ணை கோமகன் (எ)  திரு. தே.இரா.கோபால்    
5.    கள்ளக்குறிச்சி    செ.வ. மதிவாணன்    
6.    காஞ்சிபுரம்            புலவர் வெற்றிச் செழியன்    
7.    கரூர்                    முனைவர் கடவூர் மணிமாறன்    
8.    பெரம்பலூர்            மு. பரமசிவம் (எ) விளவை செம்பியன்    
9.    இராமநாதபுரம்    செல்வன் ப. சிவபிரகதீசு    
10.    சிவகங்கை            பழ. பாசுகரன்    
11.    தேனி                    ஆ. சின்னச்சாமி    
12.    திருவள்ளூர்             ச.ம. மாசிலாமணி    
13.    திருச்சிராப்பள்ளி செல்வன் பூ. இரவிக்குமார்    
                                       
ஆ)  நற்றமிழ்ப் பாவலர் விருது -2021

வ.எண்    பிரிவு    விருதாளர்கள்    
1.    மரபுக் கவிதை    கருவூர் கன்னல்    
2.    புதுக் கவிதை    முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன்    
                                  
இ)   தூய தமிழ் ஊடக விருது - 2021

வ.எண்    பிரிவு    விருதாளர்கள்     
1.    அச்சு ஊடகம்    அறிவியல் ஒளி (திங்களிதழ்) -  நா.சு. சிதம்பரம்     
2.    காட்சி ஊடகம்    இணையம் (வலையொளி) - முனைவர் மு. இளங்கோவன்    


Tags : Tamil Lexicography Day Festival ,Veeramamunivar ,Tamil , Veeramamunivar, “Tamil Lexicography Day Festival” in honor of Tamil Thonda.
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...