மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவை மாற்றியமைக்க பரிசீலனை செய்யலாமே: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த கூடாது என்பது ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவு என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.

1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் கொள்கை முடிவு, மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவை மாற்றியமைக்க பரிசீலனை செய்யலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது SC/ST பிரிவு போல OPC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த கோரி மதுரை மேலப்பாளையத்தை சேர்ந்த தவமணி தேவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அவர் மனுவில் கூறியதாவது: 2001-ம் ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் அளித்த பரிந்துரையின் படி, ஒன்றிய சமூகநீதி அமைச்சகம் ஓபிசி அடைப்படையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் பரிந்துரை செய்தது. ஆனால் அதன்படி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஓபிசி அடைப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும் போது தான் அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க எதுவாக இருக்கும்.

எனவே 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது SC/ST பிரிவு போல ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என அவர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கனது உயர்நீதிமன்ற மதுரைகிளை நிர்வாக நீதிபதி சகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என கூறினார்.

இதனை அடுத்து நீதிபதிகள் ஒன்றிய அரசின் கொள்கை முடிவு 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மக்களின் நலனுக்காக அதனை மாற்றியமைக்க பரிசீலனை செய்யலாமே என கூறினார். மேலும் இந்த வழக்கு குறித்தது மீண்டும் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: