வரும் 19ம் தேதி கோவையில் நடைபெறவுள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் விளக்கம்.!

கோவை: வரும் 19.11.2022 அன்று கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூட்டுறவுத் துறை  செயல்பாடுகளை விளக்கினார். அகில இந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை தேதி தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புக்களை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப் பயனுள்ளதாக இருக்கும். கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும்,  நெசவுத் தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்கள் இருந்தாலும் சரி அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன்மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி அதை திரும்பச் செலுத்தி சேவை செய்வதே நோக்கமாக கொண்டிருக்கிறது.

அந்த வகையில், குறிப்பாக தனியாரிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற்று தொழில் செய்வது என்பது அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டுறவை பொறுத்த அளவில், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது, அவர்கள்தான் சங்கத்தின் உரிமையாளர்கள் என்ற உரிமை இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்தச் சங்கத்தை அவர்களாகவே நிர்வகிக்கின்றார்கள். இதில் லாபம் என்பது நோக்கமல்ல. குறிப்பாக, எந்தத் துறைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்தத் துறைக்கு உண்டு. கூட்டுறவுத் துறைக்கு சேவை செய்வதே மனப்பான்மை. பொதுவாக, பொருளாதார சுரண்டல் இல்லாமல் எந்தத்தவறும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் உயர் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

இதில் தமிழகத்திற்குள்ள பெருமை என்னவென்றால், 1904ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில்  முதல்கூட்டுறவு சங்கமே இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. 1844 லண்டனில் முதன்முதல் கூட்டுறவு யூனியன் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் கூட்டுறவு சங்கம் திருவள்ளூரில் ஆரம்பிக்கப்பட்டது, அது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. முதன்முதல் கூட்டுறவு கடன் சங்கம் நாம்தான் ஆரம்பித்தோம். நகரக் கூட்டுறவுக்கடன் சங்கம் நாம்தான் ஆரம்பித்தோம். தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும்.

அதற்கும் தமிழகம் தான் முன்னோடி. தமிழக முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். விவசாய கடன் மட்டுமல்ல, அங்கிருக்கக்கூடிய தரமான உரம், தரமான விதை அல்லது குறைந்த விலையில் வாடகைக்கு டிராக்டர் போன்ற உழவு செய்கின்ற இயந்திரங்கள் வழங்கி விவசாயிகளுக்கு வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதற்காக, விவசாயத்தை சிறப்பாக செயய வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோன்ற பல சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், பண்டக சாலைகள், கூட்டுறவு சிறப்பு அங்காடி, மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் விநியோகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதன் நோக்கம். வீட்டுவசதி கடன் சங்கம், தொழிலாளர் ஆணைய கடன் சங்கங்கள், அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கும் சங்கம், உதாரணத்திற்கு தலைமைச் செயலகத்திற்கு ஒரு சங்கம், அரசு ஊழியர்களுக்கும்  கடன் சங்கம் நாம் அமைத்து அவர்களுக்குள்ளே கொடுத்து வாங்கப்படுகிறது. இப்படி பல திட்டங்கள் மூலமாக நமக்கே நாம் சேவை செய்து கொள்கிறோம். சுய சேவை, சுய சுதந்திரமாக இயங்கக்கூடியது கூட்டுறவு இயக்கம். கூட்டுறவுத்துறையை எதிர்காலத்தில் இன்னும் வலிமைப்படுத்த வேண்டும்.

அதில் சிறந்த சேவை செய்பவர்களை பாராட்ட வேண்டும். வரலாறை பார்த்தோமென்றால்,  கிராமப்புறத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் 13000 கிராம பஞ்சாயத்துகளிலும் விவசாயிகளுக்கு கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழுக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், இப்போது படித்த இளைஞர்களே உறுப்பினர்களாக சேர்ந்து பதிவு செய்து படிப்பதற்குண்டான கடனை வாங்கிக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு அறிவித்திருக்கிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தை Multi service Unit ஆக கொண்டு வருகிறோம். நாங்கள் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் சென்ற வருடம் கிட்டத்தட்ட 500 சங்கங்களை தேர்ந்தெடுத்தோம். 482 சங்கங்களுக்கு கிட்டத்தட்ட 52 கோடி வரை கொடுத்திருக்கிறோம்.

இதில் குறிப்பாக பயிர்க்கடன் எப்படி வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு guideline உருவாக்கியிருக்கிறோம். மதுரையில் சௌராஷ்டிரா நெசவாளர் சங்கம் திரு.கோசலராமன் என்பவர் ஆரம்பித்திருக்கிறார். இதுபோக, இதில் இருக்கும் நிர்வாக நெறிமுறைகளை அன்றைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த சர்.பி.டி.தியாகராஜன் அவர்கள் உருவாக்கியிருக்கிறார். நமது அரசு இருந்த காலகட்டத்தில் திரு. கோசி. மணி அவர்கள் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் விவசாயக் கடன்கள் வட்டியில்லாமல் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம். திருவாரூர் நகர கூட்டுறவு வங்கியில் தலைவர் கலைஞர் அவர்களே உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

இப்போது நம் மாண்புமிகு முதலமைச்சர் பொறுப்பேற்றதற்குப் பின்னால் எவ்வளவு பொருளாதார நெருக்கடி  இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடி, 5018 கோடி கணக்கெடுத்து, இதுவரை 4888.88 கோடி அளவிற்கு கடன் தள்ளுபடி பெற்றிருக்கிறார்கள். சுயஉதவிக்குழுக் கடனைப் பொறுத்தவரை,2755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, கொடுத்திருக்கிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை 5000 அல்லது 6000 பேருக்கு மேல் எந்த வருடமும் கொடுத்ததில்லை, ஆனால், இந்த 2022-2023 காலகட்டத்தில் இந்த ஆறு மாத காலத்தில் ஓராண்டில் கொடுக்கக்கூடிய அளவிற்கு 8000, 9000 பேருக்கு கொடுத்திருக்கிறோம். நிச்சயம் 2023 மார்ச் மாதத்திற்குள் 20000 பேருக்கு கொடுக்க வேண்டுமென்பது என் ஆசை.

அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் 50 கோடிக்கு நெருங்கிச் சென்றிருக்கிறது. இன்றுவரை 6400 கோடி அளவிற்கு பயிர்க்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் கடந்த ஆண்டு 10000 கோடி கொடுப்போம் என்று கூறி 10292 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. உரம் உரிய நேரத்தில் கொடுக்கப்பட்டது. எந்தக் குறையுமில்லாமல் Stock வைத்திருக்கிறோம். இப்படி மனித உடலுக்கு ரத்தநாளங்கள் எப்படி விரிந்து பரந்து தேவைப்பட்ட ஒன்றாக இருக்கிறதோ, கூட்டுறவு இயக்கம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது. பொது விநியோகத் திட்டத்தில் 33000 கடை இருக்கிறது, அதில், கிட்டத்தட்ட 7000 கடைகள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அதை சொந்த கட்டடத்திற்கு கொண்டுவர வேண்டுமென்று நாங்கள் முயற்சி எடுத்து, கடந்த ஆண்டு மட்டும் 300 கட்டடங்கள் அறிவிக்கப்பட்டு, 282 கட்டடங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மருந்தகங்களைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 60 மருந்தகங்கள் என்று சொன்னோம். கடந்த ஆட்சிக்காலத்தில் 300 மருந்தகங்கள்தான் இருந்தது. இப்போது கிட்டத்தட்ட 379 மருந்தகங்கள் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கையில், தேர்தலுக்கு முன்னால் 160 கோடி விற்பனை ஆகியிருந்தது. 20 சதவீத தள்ளுபடி உள்ளதால் branded மருந்துகள் விற்கப்படுகின்றன. இப்போது ஆறுமாத காலத்தில் 100 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை ஆகியிருக்கிறது. இன்னும் 100 கோடி வருவதற்கு வாய்ப்புள்ளது. அதில் லாபம் பெரிதாக வேண்டியதில்லை என்று முடிவு செய்தோம்.

உயிர் காக்கக்கூடிய மருந்துகளை மக்களுக்கு இன்னும் குறைந்தவிலையில் கொடுப்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறோம். கூட்டுறவு பண்டகசாலையில் எந்தப் பொருளும் தரம் நிர்ணயம், குறைந்த விலை, லாபம் மிகக் குறைவு, சேவை ஒன்றுதான் எங்களுடைய உயர்ந்த நோக்கம் என்பதை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் கொடுப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இரண்டு தவணையாக 4000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 33000 பொது விநியோகத் திட்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளில்  4000 ரூபாயை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 100 சதவீதம் கொடுத்துள்ளார்கள்.

கடந்த அரசாங்கம், போகிற போக்கில் அள்ளித் தெளித்த விவசாயக் கடன் தள்ளுபடி 12000 கோடி ரூபாய் என்று அறிவித்துவிட்டுச் சென்றார்கள். நான்கு மாதத்திற்கு முன் என்னிடம் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 12412 ரூபாய் கோடி ஆகிவிட்டது. கடன் தள்ளுபடியில் 20000 கோடி அளவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தள்ளுபடி கொடுத்திருக்கிறார். கடந்த ஆட்சியில் இதை அறிவிக்கும்போது நிதியை ஒதுக்கவில்லை. ஆனால் 20000 கோடி ரூபாய் அளவிற்கு நிதிநிலையை சமாளித்திருக்கிறார். இப்போது எங்களிடம் உள்ள வைப்பீடுகளை பார்த்தால்,  கடந்த 2020 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையில் இருந்த வைப்பீடு 67000 கோடி தான். இந்த ஆண்டு இந்த ஆறுமாத காலத்தில் 66000 கோடி வந்துவிட்டது.

அந்த அளவிற்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.   கூட்டுறவில் உள்ள பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டார்கள், இனி கடன் கொடுக்கமுடியாது என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்தார்கள். நகைக்கடன் மற்றும் இதர கடன்கள் நாம் வழங்கிக் கொண்டேயிருக்கிறோம். சுயஉதவிக் குழுக் கடன் சென்ற ஆண்டு 600  கோடி ரூபாய் வழங்கினோம், இந்த ஆண்டும் வழங்கிவிட்டோம். சுயஉதவிக் குழுக் கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது கூட்டுறவுத் துறையின் சேமிப்புக் கிடங்குகளில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம். கூட்டுறவுத் துறை மூலமாக  சேமிப்புக் கிடங்குகளில் 33 சதவீத அளவிற்கு தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனுடைய நோக்கம் என்னவென்றால், நாம் தானியக் கடன்கள் வழங்குகிறோம்., விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை தமிழ்நாட்டிலுள்ள வியாபாரிகள் மட்டும்தான் வாங்குவார்கள். இங்கு செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை தமிழ்நாட்டிலுள்ள வியாபாரிகள் மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தில் இருப்பவர்களும் விலை நிர்ணயித்து அவர்கள் அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த வசதி இப்போது வந்துவிட்டது. இப்போது competitive ஆக இந்தியா level-ல் தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான பொருளை கூட்டுறவுத் துறை வழங்கும்.

மலைவாழ் மக்கள் 25 பலவகை நோக்கங்கள் கொண்ட கூட்டுறவு அவர்களுக்காக உருவாக்கப்பட்டது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கும், கூட்டுறவுத் துறை மூலமாக உள்ள கடைகளில் நாம் அதற்கு நல்ல விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும். அதே சமயத்தில் நாம் தரமான பொருட்களை குறைந்த லாபம் வைத்து நுகர்வோருக்கு கொடுக்க வேண்டும்.  அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி இந்தத் துறை பல்வேறு  முகங்களைக் கொண்ட துறையாக மாறியிருக்கிறது. முதலில் கடன் தள்ளுபடி மட்டும் கொடுக்கும் துறை என்ற ஒரு சிந்தனை மக்கள் மத்தியில் இருந்துவந்தது. அப்படியென்றால், வைப்பீடுத் தொகை எப்படி வரும்?  ஒரு வருடத்தில் இப்போது 66000 கோடி வைப்பீடுத் தொகை வந்திருக்கிறது. மக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.  

அதில் முக்கியமானது, எங்கு சென்றாலும் உடனே கடன் வாங்கிவிடலாம். ஆனால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மனு செய்வதற்கே அதிக நேரம் ஆகும், மிகுந்த கடினம்.  ஆனால், கூட்டுறவில் அந்த நிலை இல்லை. விவசாயிகளானாலும் சரி, நுகர்வோரானாலும் சரி, 7 கோடி மக்களுக்கும் பயன்படும் ஒரு துறை இருக்கிறதென்றால், மனிதனுக்கு ரத்த நாளங்களைப் போல் இருக்கக்கூடிய ஒரு துறை கூட்டுறவுத் துறை. சேவை தான் இதன் நோக்கம். ஒவ்வொருவரும் உரிமையாளர், சங்கத்தின் உறுப்பினர்கள் தான் உரிமையாளர்கள். இலாபம் இதன் நோக்கமல்ல. பொருளாதார சுரண்டலிலிருந்து அடித்தட்டில் இருக்கக்கூடிய ஏழை, எளிய நலிவுற்ற மக்களை பாதுகாக்கின்ற அந்தப் பணியையும் கூட்டுறவு இயக்கம் தான் செய்கிறது. இந்நிகழ்வின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திரு. அ. சண்முக சுந்தரம், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: