சீரபாளையம் ஊராட்சியில் தேங்கி வழியும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்-கூடுதல் கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நிர்வாகம்

மதுக்கரை : சீரபாளையம் ஊராட்சியில் தேங்கி வழியும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கூடுதல் கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் கண்டனம் வலுத்துள்ளது. கோவையை அடுத்து சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சீரபாளையம் புதூர். இங்கு சுமார் 700 வீடுகள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி பகுதியில் குப்பைகளை சரிவர அகற்றாததால் மலை போல் குவிந்து கிடக்கிறது எனவும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் சூழ்நிலை உள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதால் அந்த சாலையில் நடந்து செல்லவே முடியாத அவலம் நிலவுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

 இந்நிலையில் கடந்த வாரம் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சீரபாளையம் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கையிடம், சீரபாளையம் புதூர் மக்கள் குப்பைகளை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவது குறித்து புகார் கூறினர்.

உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் கணேசனை அழைத்துக்கொண்டு, சீரபாளையம் புதூர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை பார்வையிட்டு குப்பைகளை அகற்றி சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என கூடுதல் ஆட்சியர் உத்தரவிட்டார். அப்போது உடனடியாக தூய்மைப்பணி மேற்கொள்வதாக கூடுதல் கலெக்டரிடம் உறுதியளித்த ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதையடுத்து இதேநிலை தொடர்ந்து நீடித்தால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஊராட்சி பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே பொதுமக்களின் போராட்டத்தை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீரபாளையம் புதூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Related Stories: