சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கணவருக்கு பதில் மகன் இறந்ததாக பதிவு செய்துவிட்டு லஞ்சம் கேட்கும் அதிகாரி-நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பெண் புகார்

சித்தூர் : சித்தூரில் நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் மகன் உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக விஆர்ஓ அதிகாரி பதிவு செய்துள்ளார். மேலும், இதனை சரிசெய்ய ₹11 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் முருகன் ஹரிநாராயணனிடம் தாய் மனு அளித்துள்ளார். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகன் ஹரி நாராயணன் தலைமை தாங்கினார். இணை கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து இருவரும் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில், மொத்தம் 345 பேர் மனு அளித்தனர்.

வெதுருகுப்பம் அடுத்த பெத்தபொட்டு சேனு கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 17 ஏக்கர் 25 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். மேலும் ஆடு, மாடுகளையும் மேய்த்து வந்தோம். ஆனால், தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த சுரேந்திரா, சின்னம்மா, வஜ்ரம்பாஷா, தாமோதர், பிரபாகர் ஆகிய 5 பேர் சேர்ந்து சுடுகாடுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தனர். மேலும், அந்த சுடு காட்டுக்கு சொந்தமான நிலம் முழுவதும் முள்வேலி அமைத்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு எங்களிடம் பட்டா உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மண்டல வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் கிராம வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம வருவாய் துறை அதிகாரி அந்த 5 பேரிடம் லஞ்சம் பெற்று அவர்களுக்கு போலி பட்டா செய்து கொடுத்துள்ளார். எனவே,  கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நிலத்ைத மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. சித்தூர் மிட்டூர் பகுதியை சேர்ந்த காமாட்சி, அவரது மகன் சதீஷூடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் எனது கணவர் சம்பத்குமார் இறந்து விட்டார். இதனால், 38வது வார்டு செயலாளர் அலுவலகத்தில் எனது கணவர் இறந்து விட்டதால் எனக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என கேட்டேன்.

ஆனால், கணவன் இறந்ததை பதிவு செய்யாமல் அவரது மகன் சதீஷ் இறந்து விட்டதாக பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு மீண்டும் வார்டு செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விஆர்ஓ சூப்ரஜாவிடம் எதற்காக எனக்கு இன்னும் உதவித்தொகை வழங்கவில்லை என கேட்டேன். அதற்கு விஆர்ஓ உனது கணவர் உயிரோடு இருப்பதாக உள்ளது. உன் மகன் இறந்து விட்டதாக பதிவு செய்துள்ளார்கள். எனவே, இதனை மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும்.

இதனால் தான் உங்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை வரவில்லை என தெரிவித்தனர். எனவே, எனக்கு ₹11,000 வழங்கினால் மீண்டும் நான் உனது மகன் உயிரோடு இருப்பதாக பதிவு செய்து உனது கணவர் இறந்து விட்டதாக பதிவு செய்து உனக்கு உதவித்தொகை வர ஏற்பாடு செய்கிறேன். உனது மகன் பெயரில் ரேஷன் கார்டு வர ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு கணவனை இழந்த உதவித்தொகை வழங்க வேண்டும். எனது மகன் பெயரில் ரேஷன் கார்டு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. மனுக்கை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: