×

பூலுவபட்டி அருகே தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

திருப்பூர் : பூலுவபட்டி அருகே தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளித்தனர்.

உடுமலை அருகே கணபதிபாளையம் ஊராட்சித் தலைவர் சிவக்குமார் அளித்த மனுவில்: நான் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சில சுயநலவாதிகள், என்னை அவர்களின் விருப்பத்துக்கு பயன்படுத்த மிரட்டல்கள் விடுக்கின்றனர். அதாவது ஜாதியை குறிப்பிட்டு என்னை துன்புறுத்துவதோடு, எனது பணிகளை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அதேபோல் துணைத்தலைவர் சுப்பிரமணியம் மீதும், ஊராட்சி நிர்வாகத்தின் மீது வேண்டுமென்றே  வீண்பழி சுமத்துகின்றனர்.

ஊராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஆதாரமற்ற புகார்களை முன் வைக்கின்றனர். ஊராட்சி உறுப்பினர்கள் சிலர், ஊராட்சிக்கு வரும் ஒப்பந்த பணிகளில் 10 சதவீதம் கமிஷன் தொகை தங்களுக்கு பெற்றுத்தரும்படி வலியுறுத்தினர். அதற்கு நாங்கள் உடன்படவில்லை. இந்நிலையில் எங்கள் மீது வீண்பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செயலாளர் ஈஸ்வரன் அளித்த மனு:திருப்பூர் மாவட்டத்தில் ஜேசிபி இயந்திரத்தை போலீஸார் கையகப்படுத்திய நிலையில், அந்த வழக்கு தொடர்பாக ஜேசிபியை மீட்க ரூ. 7 ஆயிரம் லஞ்சத்தை போலீசார் பெற்றுள்ளனர். அதேபோல் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவது மற்றும் வழக்கு பதிவுக்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சத்தை திருப்பூர் மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் போலீசார் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் பூலுவபட்டி நகர் பொதுமக்கள் அளித்த மனு: பூலுவபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் மாகாளியம்மன் கோயிலும் அதனை சுற்றி காலி இடமும் உள்ளது. அந்த இடத்தில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் தீண்டாமை வேலி அமைத்து, ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்க்கு மட்டும் கோயில் வழிபாடு  மற்றும் அதை சுற்றி உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மற்ற சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே தீண்டாமை வேலியை அகற்றித்தர வேண்டும்.

பல்லடம் அண்ணாநகர் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கொரோனா தொற்று காலத்தில் வருவாய் இன்றி அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானோம். தற்போது பொருளாதார ரீதியாக அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். ஆகவே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் எங்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு அண்ணாதுரை அளித்த மனு:  திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் செய்த முறைகேடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம் பெஸ்ட் கார்டனை சேர்ந்த மும்தாஜ் என்பவர் கொடுத்த மனுவில்:

எனது கணவர் இறந்த பிறகு என்னை கவனிப்பதாக கூறி எனது மகள் அனீஷ் ஆரிபா மற்றும் மருமகன் உமர் ஷெரிப் ஆகியோர் என் வீட்டை எழுதி வாங்கினர். இதன் பின்னர் தற்போது என்னை அடித்து வீட்டை விட்டு துரத்தி வருகிறார்கள். எனது கணவர் இல்லாததால் எனக்கு வருமானம் இல்லை. மருத்துவ செலவுகளை கூட என்னால் சமாளிக்க முடியவில்லை. எனவே என்னை கருணை கொலை செய்ய வேண்டும். எனது வீட்டை எனக்கு மீட்டு தர வேண்டும். என்று கூறியிருந்தார்.

Tags : Pooluvapatti , Tirupur: The public filed a petition at the Tirupur Collector's office to remove the untouchable fence near Pooluvapatti.
× RELATED பூலுவப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா