தேனி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் மேம்படுத்தப்படும் சுற்றுலாத்துறை

தேனி : திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் இயற்கை அன்னையின் கொடையான மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தேனி மாவட்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அருவிகள், அணைகள், மலைவாசஸ்தலங்கள், பழமையான ஆலயங்கள் என கொட்டிக் கிடக்கின்றன.

முக்கியமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தேனியை மையப்படுத்தி வந்து சுற்றுலா பகுதிகளை கண்டு களிப்பது வாடிக்கையாக உள்ளது.தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அருவிகளாக சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பயணிகள் உற்சாக குளியல்போட குவிந்து வருகின்றனர்.

ஆறுகள், சிற்றோடைகள், அருவிகளில் இருந்து வரும் நீரினை தேக்கி வைத்துள்ள வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணைகள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது. இதில் வைகை அணை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவானது சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும், அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் அமைந்துள்ளது. மேக கூட்டங்களை வானத்தில் இருந்து மண்ணுக்கு கொண்டு வந்து தவழச்செய்யும் மேகமலை, குரங்கனி டாப்ஸ்டேசன், போடிமெட்டு, கொலுக்கு மலை ஆகியவையும் அங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளும் சுற்றுலா பயணிகளின் கண்களை விட்டு அகலச் செய்வதில்லை.

தேனி மாவட்டத்தின் அண்டைய மாவட்டமான கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி, மூணாறு பகுதிகள் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இத்தகைய சுற்றுலா தலங்களுக்கு செல்ல தேனி வந்தால் ஒன்றரை மணி நேரங்களுக்குள்ளாக சென்று சேரும் வகையில் உள்ளது. இதுதவிர அண்டைய மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலும், தேனி மாவட்டத்தை ஒட்டியே உள்ளது.

பழமையான ஆலயங்களான வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், மஞ்சளாறு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில், ஞானாம்பிகை கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் என பழமையான கோயில்களும் நிரம்பியுள்ளன. இத்தகைய இயற்கை அன்னை வாரி வழங்கியுள்ள சுற்றுலா தலங்களை ஒட்டுமொத்தமாக ஒருங்கே பெற்ற மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை உலக அளவில் மேம்படுத்த திமுக அரசு பல முயற்சிகளை தற்போது எடுத்துள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்க வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாபயணிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தினை உருவாக்கி உள்ளது.

இதன்படி, தேனியை மையமாகக் கொண்டு தேனி மாவட்ட சுற்றுலாதலங்களை காண வரும் பயணிகள் வீட்டுச்சூழலில் உணவு வசதியுடன் தங்கி செல்ல வசதியாக வீட்டு விடுதி அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதற்காக சில நிபந்தனைகளுடன் விடுதி நடத்த விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து வருகிறது.

இதேபோல, தேனியில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு சென்று வர கேரவன் வேன் எனப்படும் சுற்றுலா பேருந்து வசதி செய்யவும், இத்தகைய பேருந்து வசதி செய்ய முனையும் தொழில் முனைவோர்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் ரிஜிஸ்ட்ரேசன் பணியை துவக்கி உள்ளது. இதுதவிர தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் சாகச சுற்றுலா அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதன்படி, இவ்வணை பகுதிகளில் பாரா கிளைடர், பாராசூட் சாகசங்கள் நடத்த திட்டமிட்டு இதற்கான தகுதியான அணைகள் குறித்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வைகை அணையில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, படகு குழாமுடன் கூடிய பூங்கா சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இது செயல்படாமல் படகுகள் குப்புற படுக்க வைக்கப்பட்டுள்ளதை மாற்றி மீண்டும் படகு விடவும், மஞ்சளாறு அணையிலும் படகு சவாரிக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தேனி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் நடந்த உலக சுற்றுலா தினத்தின்போது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மூலமாக சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேனி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா தொழில் முனைவோர் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் பலர் வீட்டுச்சூழலில் விடுதி நடத்த அனுமதி கோரி பதிவு செய்துள்ளனர். இதேபோல, சுற்றுலா பேருந்து இயக்கவும் தொழில் முனைவோர் முன்வந்துள்ளனர்.

சாகச சுற்றுலா நடத்த இடத் தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிந்ததும், பாராகிளைடிங் போன்ற சுற்றுலா தேனி மாவட்டத்திற்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தேனி மாவட்டத்தில் சுற்றுலா மேம்படும் போது தேனி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட சுற்றுலா வழிகாட்டிகளாக பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: