×

தமிழகத்தில் இன்று மாலை முழு சந்திர கிரகணம்: பெரும்பாலான கோயில்கள் நடை அடைப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை முழு சந்திர கிரகணம் தெரிவதையொட்டி கோயில் நடைகள் அடைக்கப்படுகின்றன. சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி அம்ப்ரா என்றும் அதன் புற நிழல் பகுதி பெனும்ப்ரா என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. புற நிழல் பகுதியானது கண்ணுக்கு அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை.
சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும். இன்று செவ்வாய்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க இயலாது. ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும். இந்தியாவின் கிழக்கு பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க இயலும்.

இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தென்படும். தமிழ் நாட்டில் சென்னையில், சந்திரன் உதிக்கும் நேரம் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள். சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும். சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பெரும்பகுதியான கோயில் நடைகள் இன்று அடைக்கப்படுகின்றன.

சென்னை: சென்னையில் 5 மணி 39 நிமிடங்கள் கழிந்த பிறகுதான் 40 நிமிடங்கள் காண முடியும். சென்னை நகரில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்துமே மூடப்படுகின்றன.

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று காலை 7 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் சந்திர கிரகணத்தை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு அம்மன் மற்றும் சுவாமி மூலஸ்தானத்தில் பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு, நடை சாத்தப்பட்டது.

பழநி

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. அதன் பின்னர் பகல் 2.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று பகல் 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7 மணிக்கு, கோயில் நடை திறக்கப்படும்.

திருவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், இன்று பகல் 12 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், புரம் பொற்கோயில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பாலமுருகன் கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நடை மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்கள்

சந்திர கிரகணத்தையொட்டி தஞ்சை பெரியகோயில் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் 11 மணி முதல் இரவு 7 மணி வரையும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், நாகை மாரியம்மன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கட் ரமணசுவாமி கோயில், கரூர் மாரியம்மன் கோயில், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில், அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம், திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் மதியம் 12 முதல் இரவு 7 மணி வரை நடை சாத்தப்படுகிறது.

குமரி

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் ேகாயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உட்பட திருக்கோயில்களில் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

கடலூர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாலை 5 மணி முதல் 7 மணிவரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும், அதன்பின்னர் பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் திறக்கப்படுகிறது. விழுப்புரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் முற்பகல் 11 மணி முதல் மாலை 7 மணிவரை நடைசாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Total lunar eclipse in Tamil Nadu this evening: Most temples closed
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து