×

பராமரிப்பு, ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி டேன் டீக்கு சொந்தமான 2153 ஹெக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கக்கூடாது-தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள் வலியுறுத்தல்

குன்னூர் : பராமரிப்பு ஆட்கள் பற்றாக்குறைையை காரணம் காட்டி நீலகிரி மற்றும் வால்பாறையில் அரசு தேயிலை தோட்ட(டேன் டீ) நிர்வாகத்திற்கு சொந்தமாக உள்ள 2153 ஹெக்டர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க கூடாது என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.  இலங்கையில் 1840ம் ஆண்டு 2 லட்சத்து 58 ஆயிரத்து 72 ஏக்கர் நிலத்தில் ஆங்கிலேயர்கள் காபி தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் 1890ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக நோய் தாக்குதல் ஏற்பட்டதால், காபி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆங்கிலேயர்கள் தேயிலை தோட்டங்களை உருவாக்கினர். இதற்காக தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் 1921ம் ஆண்டு வரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 994 பேர் தேயிலை தோட்டங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை, வாக்குரிமையும் அளிக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களுக்கு பிறகு 1947ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மலையக தமிழர் வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். இதனால் 1948ம் ஆண்டு தமிழக தோட்ட தொழிலாளர் குடும்பங்களின் வாக்குரிமையை இலங்கை அரசு பறித்தது. மேலும் இலங்கையில் எந்தவித உரிமையையும் பெற முடியாத நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது.

பின்னர் இந்தியா-இலங்கை இடையே சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்டது.அதன் அடிப்படையில் சுமார் 5¼ லட்சம் தமிழர்களை மீண்டும் ஏற்கவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தவும் இந்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதனிடையே இலங்கையில் போர் தொடர்ந்ததால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழர்கள் தாயகம் திரும்பினர்.

அவ்வாறு வந்த தமிழர்கள் நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மறு குடியமர்த்தப்பட்டனர். தற்போது இந்தியா முழுவதும் தாயகம் திரும்பிய தமிழர்கள் சுமார் 15 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2லட்சத்திற்கும் அதிகமாக  உள்ளனர்.  
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இரு அரசுகளின் மறுவாழ்வு திட்டங்களும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பின்தங்கிய நிலையில் தேயிலை தோட்டங்கள் மற்றும் கூலி வேலைக்கு சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அண்ணா முதல்வராக இருந்த போது வனத்துறை நிலத்தை அரசு தேயிலை தோட்டமாக மாற்றி டேன் டீயை உருவாக்கி இத்தொழிலாளர்களை பணியமர்த்தினார். சுமார் 4311.04 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இலங்கையில் இருந்து திரும்பிய 2,445 குடும்பங்களைச் சேர்ந்த 6,700 பேர் அப்போது நிரந்தர தொழிலாளர்களாகவும் ஆயிரக்கணக்கானோர் தற்காலிக தொழிலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

 இந்த நிலையில் தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் டேன் டீக்கு சொந்தமான 2,153 ஹெக்டேர் நிலத்தை, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் வருமானம் இல்லாத காரணத்தால் வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தாயகம் திரும்பிய தமிழர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தை ஒப்படைத்தால் 1,700 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நிலத்தை ஒப்படைக்கக்கூடாது என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘தாயகம் திரும்பிய எங்களுக்கு இலை பறிக்கும் தொழிலைவிட வேறு தொழில் தெரியாது.  தனியார் தேயிலைக்கு விலை உள்ளது. ஆனால் அரசு டேன் டீ தேயிலைக்கு ஏன் விலை இல்லை. முறையான அதிகாரிகள் இல்லாதது மட்டுமே டேன் டீ நஷ்டத்தில் இயங்குவதற்கு முக்கிய காரணம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் வாதி அதிகாரிகள் டேன் டீ தொழிற்சாலையில் பல இயந்திரங்களை எடைக்கு போட்டு கொள்ளையடித்தனர். டேன் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு வழங்கினால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

பணி ஓய்வு பெற்றவுடன் குடியிருப்பையும் காலி செய்ய வேண்டும் என்கின்றனர். எங்களிடம் நிலம், பணம் என ஒன்றுமில்லை. தினசரி 340 ரூபாய் கூலி பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.  குழந்தைகள் படிப்பு, மருத்துவம், அத்யாவசிய தேவை என அனைத்தும் அதில் இருந்து மட்டுமே பெற்று வருகிறோம். குழந்தைகளுடன் நடுத்தெருவிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம். எங்களின் பிள்ளைகள் படித்துள்ளார்கள் அவர்களுக்கு டேன் டீ நிர்வாகத்தில் பணி வழங்க மறுத்து வருகின்றனர்’’ என்றனர்.

இது குறித்து  தேயிலை தொழிலாளி ஜானகி கூறுகையில், ‘‘இலங்கையில் இருந்து  தாயகம் திரும்பிய எங்களுக்கு அப்போதைய முதல்வரான அண்ணா டேன் டீ நிர்வாகத்தில் எங்களுக்காக உருவாக்கி அங்கு வேலை கொடுத்தார். தினந்தோறும் இலைபறித்து வேலை செய்து வரும்‌ எங்களுக்கு வேறு வேலை தெரியாது. அது மட்டுமின்றி எங்களிடம் சொந்தமாக எந்த நிலமும் கிடையாது. குடியிருப்பு கூட டேன் டீ நிர்வாகத்தின்  குடியிருப்பில் தான் வாழ்ந்து வருகிறோம். பழங்கால குடியிருப்பு என்பதால் பராமரிப்பின்றி உள்ளது.  மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. பணிக்காலம் முடிந்தவுடன் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தி வருவதும், நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைப்பதம் அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

டேன்டீயில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான செல்வராஜ் கூறுகையில், ‘‘1973ம் காலக்கட்டத்தில் இலங்கை இருந்து இங்கு வந்து வேலை செய்ய தொடங்கினோம். அடர்ந்த காடுகளாக இருந்த வனங்களை அழித்து தேயிலை நட்டு அதில் பணியாற்றினோம். தற்போது லாபம் இல்லை எனக்கூறி டேன் டீயை மூட முடிவு செய்துள்ளனர். ஆனால் தனியார் தேயிலை தொழிற்சாலையில் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால் டேன் டீ யில் மட்டும் லாபம் இல்லை எனக்கூறுவதற்கு நிர்வாக முறைகேடு முக்கிய காரணம். கடந்த ஆட்சி காலத்தில் தேயிலை பற்றியே அறியாதவர்களை  அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக கொண்டனர்.

  தனியார் ஆலையில் பணிபுரியும் அதிகாரிகளை காட்டிலும் டேன் டீ  நிர்வாகத்தில்  பணிபுரியும் அதிகாரிகளுக்கு பல மடங்கு உயர்வாக சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதி இல்லாதவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்ததால் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்கிறது.  

தேயிலை தோட்டங்களை  வனத்துறையினருக்கு வழங்குவதற்கு பதிலாக தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கினால் அவர்கள் அவற்றை பராமரித்து கொள்வார்கள். தற்போது சுமார் 3 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர். வனத்துறைக்கு நிலத்தை மாற்றினால் 1700 பேரை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டி வரும். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே வனத்துறைக்கு நிலத்தை ஒப்படைக்க கூடாது’’ என்றார்.

தேயிலை தொழிலாளி பவித்ரா கூறுகையில், ‘‘டேன் டீயில்  பணியாற்றி வருகிறோம். எங்களின் பிள்ளைகள்  படித்துள்ளனர். அவர்களுக்கு டேன் டீ நிர்வாகத்தில் பணி வழங்க நிர்வாகம் மறுத்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வர்களுக்கு இங்கு பணி வழங்குகின்றனர். எங்களின் பிள்ளைகளுக்கு நிர்வாகத்தில் பணிபுரிய பணி வழங்க வேண்டும். தமிழக அரசு டேன் டீ நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து திறமையான அதிகாரிகளை நியமித்து டேன் டீ நிர்வாகத்தின் லாபத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி தேயிலை தோட்டங்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

Tags : Tan Dee ,Tamils , Coonoor: Government tea estates in Nilgiris and Valparai are owned by management citing lack of maintenance manpower.
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!