×

நியூசிலாந்துடன் நாளை அரையிறுதி: பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டரில் மாற்றம்?

அடிலெய்டு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 2ல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் குரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நாளை அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பெரும் பிரச்னையாக இருந்துவந்த நிலையில், பாகிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரும் சோபிக்காததால் பாகிஸ்தான் அணி சுமாராக ஆடியது. ஃபகர் ஜமானுக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக ஆடி அணிக்கு வலுசேர்த்துள்ளார்.

ஷான் மசூத், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ் ஆகியோரும் நன்றாக ஆடுவதால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளது. பவுலிங்கை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணியில் எந்த பிரச்னையும் இல்லை. ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஆகிய நால்வரும் தங்களது வேகத்தில் எதிரணிகளை மிரட்டுகின்றனர். ஸ்பின்னர்களில் ஷதாப் கான், முகமது நவாஸுடன் தேவைப்படும்போது இப்திகாரும் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் பெரிய பிரச்னையாக இருந்துவந்த நிலையில், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், ஷான் மசூத் ஆகியோர் நம்பிக்கையளிப்பதால் பாகிஸ்தான் அணி உற்சாகமும் உத்வேகமும் அடைந்துள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் அரையிறுதி போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம் செய்யப்படாது. ஆனால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. பார்மில் இல்லாத பாபர் அசாம் ஆரம்பத்திலேயே ஆட்டமிழப்பது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. அதற்கு பதிலாக ரிஸ்வானுடன் முகமது ஹாரிஸ் தொடக்க வீரராக இறக்கப்படலாம். கடைசி 2 போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்த முகமது ஹாரிஸ் தொடக்க வீரராக இறக்கப்படுவதன் மூலம், பாபர் அசாம் வீணடிக்கும் பந்துகள் வீணாகாமலும் இருக்கும். தொடக்கம் முதலே அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை ஹாரிஸ் அமைத்து கொடுக்கும்பட்சத்தில் அது பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை அடிக்கவும் உதவும். 3ம் வரிசையில் ஷான் மசூத்தே ஆடலாம். பாபர் அசாம் ஆட்டத்தின்  சூழலுக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரில் இறங்கலாம்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா.

Tags : New Zealand ,Pakistan , Semi-final with New Zealand tomorrow: Change in Pakistan batting order?
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...