×

ஓசூர்-பாலக்கோடு வரை 250 கிமீ., தூரத்திற்கு யானைகள் வெளியேறுவதை தடுக்க 10 அடி உயர கம்பிவேலி-முதற்கட்டமாக 20 கி.மீ தூரம் அமைப்பு

தர்மபுரி : யானைகள் வனத்தைவிட்டு வெளியே வராமல் இருக்க, ஓசூர்-பாலக்கோடு வரை 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தூண் அமைத்து, 10 அடி உயரத்திற்கு இரும்புவட கம்பிவேலி அமைக்கும்பணி நடக்கிறது. இதுவரை 20 கிலோ மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி வன மண்டலத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம்,  பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தர்மபுரி, அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி மற்றும் மஞ்சவாடி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரக எல்லைகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக, ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் அதிகளவில் யானைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்த வன பகுதிகளில் 200 முதல் 250 யானைகள் உள்ளன. தற்போது யானைகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கோடை கோலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையான கர்நாடகா, கேரளாவில் இருந்து, தமிழகத்திற்குள் யானைகள் இடம் பெயர்வது வழக்கம்.

அதேபோல், கோடைகாலத்தில் யானைகள் இடம் பெயர்ந்து தமிழக வனப்பகுதியான ஜவளகிரி, உரிகம் வழியாக தளி, ஓசூர் வனப்பகுதிக்கு வந்து, அங்கிருந்து அஞ்செட்டி, ஒகேனக்கல், பாலக்கோடு, பென்னாகரம் வனப்பகுதிகளுக்குள் சுற்றித்திரிகின்றன.  கோடைகாலம் முடிந்ததும், மீண்டும் வந்த இடத்திற்கே யானைகள் திரும்பி செல்கின்றன. ஆனால், கர்நாடக வனப்பகுதி எல்லையில், சோலார் கம்பிவேலி அமைத்து, யானைகள் மீண்டும் நுழைவது தடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், வந்த இடத்திற்கு செல்வதற்காக யானைகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சுற்றிப்பார்த்து, நுழைய முயற்சிக்கின்றன. சில இடங்களில் கிடைக்கும் தடத்தின் வழியாக சென்று விடுகின்றன.

முடியாத யானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதிகளில், உணவுக்காக சுற்றித்திரியும் போது, ஊருக்குள் வரும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு வரும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்கள் சேதமடைகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஜவளகிரி, உரிகம், ஓசூர், ஓகேனக்கல், பாலக்கோடு, பென்னாகரம் வனச்சரகத்தில் தான், யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியே வருகின்றன. இந்த பகுதிகளில் தான் உயிரிழப்பு சம்பவமும், பயிர்ச்சேதமும் அதிகம் ஏற்படுகிறது. சில நேரங்களில் யானைகள் இறப்பும் உள்ளது. எனவே, யானைகள் காட்டை விட்டு வெளியே வராதபடி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்’, என்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 900 கிலோ மீட்டர் பரப்பளவில் யானைகள் வாழ்விடமாக கொண்டு உள்ளன. இப்பகுதியில் 250 யானைகள் உள்ளன. ஒருசில இடங்களில், அடிக்கடி யானைகள் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களில் புகுந்து விடுகின்றன. வருடத்திற்கு 10 முதல் 15 பேர் வரை, யானை தாக்கி இறக்கும் சம்பவம் நடக்கிறது.

ஆண்டுக்கு ₹50 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்கப்படுகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் இருக்க, யானை அகழி தோண்டப்பட்டது. யானைகள் சில இடங்களில் காலால் மண்ணை போட்டு, பள்ளத்தை மூடி வெளியே வரத்தொடங்கின. சோலார் வேலி ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு பிறகு வலுவிழந்து விடுகின்றன. இதை முறையாக பராமரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சோலார் வேலியை சேதப்படுத்தி விட்டு, யானைகள் காட்டில் இருந்து வெளியே வந்து விடுகின்றன. தற்போது ஓசூர் வனச்சரகத்தில் கான்கிரீட் தூண் அமைத்து 10 அடி உயரத்திற்கு இரும்புவட கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

 இதுவரை 20 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு ₹50 லட்சம் செலவு ஆகிறது. 250 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட வேண்டியது உள்ளது. யானைகள் அடிக்கடி வெளியே வரும் இடங்களை கண்டறிந்து, இந்த வேலி அமைத்து வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி முதல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வரை, இந்த இரும்புவட கம்பிவேலி அமைக்கப்பட வேண்டியது உள்ளது. அதாவது யானைகள் அடிக்கடி வெளியே வரும் இடங்களை கண்டறிந்து, இந்த வேலி அமைக்கப்படுகிறது. ஒகேனக்கல் பகுதியில் யானைகள் உள்ளது. ஆனால் பெரியதாக பிரச்னை இல்லை. ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், குந்துக்கல், குந்துக்கோட்டை, பாலக்கோடு வரை இரும்புவட கம்பிவேலி அமைத்தால் யானைகள் வெளியே வராமல் தடுத்து விடலாம்.

 வனப்பகுதியிலேயே  யானைகள் இருக்கும் வகையில் செய்துவிடலாம். அப்போதுதான் மக்களுடைய பாதுகாப்பையும் உறுதிபடுத்த முடியும். 20 கிலோ மீட்டர் வரை கம்பிவேலி அமைத்த பகுதிகளில் மக்கள் சந்தோஷமாக விவசாயம் செய்து வருகின்றனர். இரும்புவட கம்பிவேலி அமைக்க போதிய நிதி ஆதாரம் இல்லை. ஒரு வருடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் என்ற கணக்கில் தான், இரும்புவட கம்பிவேலி அமைத்து வருகிறோம். ஏற்கனவே அமைத்த கம்பிவேலியை சேதப்படுத்தி, யானைகளால் எளிதாக வெளியே வரமுடியவில்லை.

ஆப்பிரிக்கா காட்டில் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க, ஆம்ஸ்ட்ராங் என்பவரால் இந்த இரும்புவட கம்பிவேலி அமைத்து வெற்றி காணப்பட்டது. அந்த தொழில்நுட்பத்தில், தற்போது ஓசூர் முதல் பாலக்கோடு வரை 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புவட கம்பிவேலி அமைக்கும்பணி நடக்கிறது. இந்த கம்பி வேலி தான் 10 வருடம் முதல் 25 வருடம் வரை உறுதியாக இருக்கிறது. இதுதான் மக்களுக்கும், விலங்களுக்கும் மற்று பயிருக்கும் பாதுகாப்பானது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Osur-Palakkod , Dharmapuri: To prevent elephants from coming out of the forest, a concrete pillar has been constructed for a distance of 250 km from Hosur-Palakode, and 10 feet
× RELATED ஓசூர்-பாலக்கோடு வரை 250 கிமீ.,...