×

மேட்டுப்பாளையம் அருகே மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடக்கம்; பவானி ஆற்றில் படகு பயணம்-சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மேட்டுப்பாளையம் :  மேட்டுப்பாளையம் அருகே மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடங்கியதை தொடர்ந்து பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் பவானி ஆற்றில் இயந்திர படகு இயக்க சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது.

இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 103 அடியை எட்டியுள்ளது. இதனால் பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் அமைந்துள்ள லிங்காபுரம் காந்தவயல் கிராமங்களுக்கு இடையிலான 20 அடி உயர் மட்ட பாலம் ஏற்கனவே தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது இணைப்பு சாலையும் வெள்ளநீரில் முழுமையாக மூழ்கியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்காக வெளியூர் செல்வோர் என பொதுமக்கள் மிகவும் சிரமடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து அரை கிமீ நடந்து சென்று பின்னர் அங்கிருந்து பரிசல் மூலம் தங்களது கிராமங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் தண்ணீரில் வாகனங்களை இயக்கி பாதியிலேயே பழுதாகி நின்று அவதியடைந்து வருகின்றனர்.

இதையடுத்து மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே ஆழியாறு பேரூராட்சி பகுதியில் இருந்து லாரி மூலம் இயந்திர படகு லிங்காபுரம் கொண்டு வரப்பட்டு கிரேன் உதவியுடன் பவானி ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, நாளை முதல் லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானி ஆற்றில் பொதுமக்கள் வசதிக்காக படகு இயக்கப்படும் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Tags : Mettupalayam ,River , Mettupalayam: Due to rain and flood near Mettupalayam, road traffic is blocked due to public inconvenience
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது