50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை வரும் 11-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: மின்சாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: புதிதாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை வரும் 11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இலவச மின் இணைப்பு வேண்டி இதுவரை 4.5 லட்சம்  விவசாயிகள் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

அவர்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 2022-23-ம் ஆண்டில் மேலும் 50,000 விவசாயிகளை இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் வருகிற 11-ம் தேதி துவங்க இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

2022-23-ம் ஆண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கபடும் என்ற ஒரு மகத்தான அறிவிப்பு முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டத்தை வருகின்ற 11-11-2022 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடாகோவில் பகுதியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: