×

பல்லாவரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

பல்லாவரம்: பல்லாவரம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி பரிதாபமாக உயிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 6 வயதில் ராகஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர். சிறுமி ராகஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், சிறுமி ராகஸ்ரீ கடந்த 4 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரை சிகிச்சைக்காக பெற்றோர் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகஸ்ரீக்கு குணமாகவில்லை. மாறாக நேற்று முன்தினம் காய்ச்சல் மீண்டும் அதிகமானது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர், சிறுமியை மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ராகஸ்ரீ நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமி ராகஸ்ரீ டெங்கு நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. டெங்கு நோய் பாதிப்பு காரணமாக சிறுமி ராகஸ்ரீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் சிறுமி வீட்டின் அருகே சிறப்பு முகாம் அமைத்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Pallavaram , Pallavaram, Area, Dengue Fever, Girl Killed
× RELATED செங்கல்பட்டில் அனைத்து கட்சி...