×

அனகாபுத்தூர் பகுதியில் ரூ.48.2 கோடி மதிப்பில் துணை மின் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளான பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர்,  குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின் தடை, குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக இந்த பகுதிக்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், மின்வாரியம் சார்பில் அனகாபுத்தூரில் ரூ.48.2 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு, எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மின் துண்டிப்பு ஏற்படும் தருவாயில் இதன் செயல்பாடு குறித்தும், அதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அங்கு பணியில் இருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட துணை மின் நிலையமானது மொத்தம் 33/11 கிலோ வாட் திறன் கொண்டது. இதனால், பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின்தடை பிரச்னை இனி தவிர்க்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, பம்மல் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Anagaputhur ,Chief Minister , Anagaputhur area, sub-station was inaugurated by Chief Minister
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...