என்பிடிஇஎல் மாணவர்களுக்கு உதவித்தொகை: ஐஐடி, சதர்லாண்ட் இணைந்து வழங்குகிறது

சென்னை: விரிவான தொழில்நுட்ப கற்றல் குறித்த தேசிய திட்டத்தின் (என்பிடிஇஎல்) 10 ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியும், சதர்லாண்டும் கல்வி உதவி தொகை வழங்கவுள்ளன.

இது குறித்து ஐ.ஐ.டி மற்றும் பி.ஐ.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இந்த திட்டம் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான செலவை 50% அளவிற்கு குறைக்க கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. 2022 ஜனவரிக்கான விரிவடைந்த தொழில்நுட்ப கற்றல் குறித்த தேசிய திட்டத்தின் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் சான்றிதழ் பெற இந்த உதவித்தொகை பயன்படும். நாடு முழுவதும் உள்ள 18 மாநிலங்களின் 160 கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் இந்த திட்டம் பற்றி கூறியதாவது: சதர்லாண்டின் இந்த தாராளமான உதவியால் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவர்கள், என்பிடிஇஎல் சான்றிதழை பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்’ என்றார். சதர்லாண்டின் உலகளாவிய மக்கள் செயல்பாட்டு பணியின் மூத்த துணைத்தலைவர் அனில் ஜோசப் கூறுகையில், பொறியியல், கலை, வணிகவியல், அறிவியல், நிர்வாகவியல் உட்பட நாடு முழுவதும் உள்ள 5,000 கல்லூரிகளுடன் என்பிடிஇஎல் தற்போது நெருக்கமாக பணியாற்றி வருகிறது. தங்களின் துறைகளில் நவீன திறன்களுடன், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இந்த சான்றிதழ் தேர்வுகளுக்கு ஏராளமான மாணவர்களை இந்த திட்டம் தயார்ப்படுத்துகிறது.

மத்திய கல்வித்துறையின் கீழ், சென்னை ஐஐடி, இந்திய அறிவியல் கல்விக்கழகம் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட ஐஐடிகளின் கூட்டு முன்முயற்சியாக என்பிடிஇஎல் உள்ளது. அறிவியல், சமூகவியல், நிர்வாகவியல் போன்ற துறைகளில் தேசிய பெருந்திரள் திறந்தநிலை இணைய வகுப்புகளுக்கான https://swayam.gov.in/ என்ற இணைய பக்கத்தில் ஒவ்வொரு செமஸ்டரின் போதும், 600க்கும் அதிகமான சான்றிதழ் படிப்புகளை என்பிடிஇஎல் வழங்குகிறது.  1.4 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் என்பிடிஇஎல் வீடியோக்களை பெற்றுள்ளனர். 1.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், என்பிடிஇஎல் தேர்வு உதவித்தொகை மூலம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: