பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சாலையில் கத்திகளை தேய்த்த 2 கல்லூரி மாணவர்கள் கைது: போலீசார் நடவடிக்கை

பெரம்பூர்: வியாசர்பாடியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சாலையில் கத்திகளை தேய்த்து கெத்து காட்டிய 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் தாங்கள் கையில் வைத்திருந்த கத்திகளை வைத்து சாலையில் தேய்த்தபடி செல்வதும் பொதுமக்களை அச்சுறுத்துவதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் 28ம் தேதி செங்குன்றம் பகுதியில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் அரசு பேருந்து (தடம் எண் 57) வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்றபோது வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்து கூரையின் மீது நின்ற படியும் பயணம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிலிருந்து 2 மாணவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்படி சாலையில் கத்திகளை தேய்த்து கெத்து காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து வீடியோவில் வந்த மாணவர்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தீபன் (19), திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை பேட்டை பகுதியை  சேர்ந்த சாரதி (19) ஆகிய 2 மாணவர்கள் கத்தியுடன் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பேருந்தில் ரகலையில் ஈடுபட்ட 2 பேரையும் நேற்று எம்கேபி நகர் போலீசார்  கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: