தென் கொரியா, அமெரிக்காவை தாக்கவே ஏவுகணை சோதனை: வட கொரியா திடுக் தகவல்

சியோல்: ‘தென் கொரியா, அமெரிக்காவை குறி வைத்தே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது’ என்ற வட கொரியா திடுக் தகவலை கூறி உள்ளது. வடகொரியாவின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் அமெரிக்கா, தென்கொரிய படைகள் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா  ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. கடந்த வாரம் வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது. இந்த ஏவுகணைகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வீசப்பட்டன. அதில் ஒரு ஏவுகணை தென் கொரிய கடலோரத்தில்  விழுந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில்,வட கொரிய ராணுவம் நேற்று தெரிவிக்கையில்,‘ தென் கொரியா, அமெரிக்கா விமான தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிதான் ஏவுகணை சோதனை. இதில் அணு ஆயுதங்களும் அடங்கும். எதிரி நாடுகளின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் கொரிய மக்கள் ராணுவம்(கேபிஏ) ஈவு இரக்கமின்றி அதற்கான  பதிலடி கொடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க, தென் கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘ வட கொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கிம் ஜோங் உன் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்’’ என்று எச்சரித்துள்ளனர்.

Related Stories: