×

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 19 வயது ஹோல்கர் சாம்பியன்: ஜோகோவிச் அதிர்ச்சி

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் ஹோல்கர் ரூன் (19 வயது) முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான இறுதிப் போட்டியில்  செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் (35 வயது, 7வது ரேங்க்) - ஹோல்கர் (18வது ரேங்க்) மோதினர். நடப்பு சாம்பியனான ஜோகோவிச்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்த்து வரும் பிரச்னையால் இந்த ஆண்டு 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடவில்லை. இதன் காரணமாக தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை இழந்து பின்தங்கியுள்ளதால், 1000 தரவரிசைப் புள்ளிகளை கொண்ட இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும்  என்ற வேகத்துடன் தொடக்கம் முதலே விளையாடி வந்தார்.

அதற்கேற்ப பைனலிலும் முதல் செட்டை  ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தி முன்னிலை பெற்றார். எனினும், கடும் நெருக்கடி கொடுத்த ஹோல்கர் அடுத்த 2 செட்களையும் 6-3, 7-5 என வசப்படுத்தி கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 33 நிமிடத்துக்கு நீடித்தது.   முதல்முறையாக ஏடிபி 1000 அந்தஸ்து கொண்ட பெரிய போட்டியில் வென்ற ஹோல்கர், 920 தரப்புள்ளிகள் பெற்று உலக தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளார். நடப்பு சாம்பியனாக இருந்து தோற்றதால் 1000 புள்ளிகளையும் இழந்த ஜோகோவிச் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தில் உள்ளார்.



Tags : Paris Masters Tennis ,Holger ,Djokovic , Paris master, tennis, 19-year-old Holger, champion, shock Djokovic
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!