ஷாருக்கானின் ஜவானுக்கு சிக்கல் இயக்குனர் அட்லி மீது தயாரிப்பாளர் புகார்

சென்னை: கதையை திருடியிருப்பதாக இயக்குனர் அட்லி மீது தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார். அட்லி இயக்கிய முதல் படம் ராஜா ராணி, இந்த படம் மௌன ராகம் படத்தின் தழுவல் என பிரச்னை எழுந்தது. இதையடுத்து அவர் இயக்கிய தெறி, படம் விஜயகாந்த் நடித்த சத்ரியன், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை, பிகில், இந்தியில் வெளியான சக்தே இந்தியா படத்தின் காப்பி என தொடர்ந்து அட்லி இயக்கிய படங்களுக்கு சிக்கல் வந்திருக்கிறது. இப்போது பாலிவுட் சென்றுள்ள அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்தின் கதையைத் தழுவி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன், அட்லிக்கு எதிராகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். பேரரசு படத்தை அவர்தான் தயாரித்து இருந்தார்.

அவர் அளித்துள்ள புகாரில், ‘ஜவான் படம், எனது ‘பேரரசு’ படத்தின் கதை என்று வெளியாகி உள்ள தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரிக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருக்கிறார். ஏறக்குறைய அட்லியின் அனைத்து படங்களும் இதே போன்ற சிக்கல்களை சமூக வலைதளத்தில் எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை இது பற்றி அட்லி பதில் கூறாமல் இருந்து வருகிறார். இந்த புகார் பற்றி ஜவான் படத்தை தயாரிக்கும் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Related Stories: