என்னை அவமதிக்கிறார்: அர்ஜுன் மீது இளம் நடிகர் குற்றச்சாட்டு

ஐதராபாத்: அர்ஜுன் தன்னை அவமதிப்பதாக இளம் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் புகார் கூறியுள்ளார். நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த படத்தை தயாரித்து, அர்ஜுன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிக்க விஷ்வக் சென் என்பவரை தேர்வு செய்தார். ஆனால் படப்பிடிப்புக்கு விஷ்வக் சென் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ‘விஷ்வக் சென்னிடம் அர்ப்பணிப்பு குணம் இல்லை. அவர் படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றி விட்டார். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க சம்மதித்தேன். ஆனால் அவர் சரியாக நடக்கவில்லை. இனி 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் பணியாற்ற மாட்டேன்’ என அர்ஜுன் கோபமாக கூறினார். இது பற்றி விஷ்வக் சென் பதிலளித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘இந்த படத்தின் பாதி கதையைத்தான் எழுத்து வடிவில் என்னிடம் தந்தார்கள். அதில் நான் சில ஆலோசனைகளை கூறினேன். ஆனால் அதை அர்ஜுன் ஏற்க தயாராக இல்லை. என்னை சமாதானப்படுத்த அவர் முயற்சிகள் செய்தார். ஆனால் குறிப்பிட்ட திருத்தங்களை செய்தால் நான் நடிப்பதாக சொன்னேன். படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிறார்கள். நான் சொன்ன மாற்றங்களை ஏற்காதபோது, நான் படப்பிடிப்புக்கு சென்றால் எனக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால்தான் செல்லவில்லை. இப்போது கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்கிறார். எதையும் பேசித்தான் தீர்வு காண முடியும். ஆனால் என்னிடம் பேசாமல், என்னை அவமதிக்கும் வகையில் பத்திரிகையாளர்களிடம் அர்ஜுன் நடந்து கொண்டார்’ என்றார்.

Related Stories: