×

சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலிக்க ஒருமித்த கருத்துள்ள அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019ம் ஆண்டு ஒன்றிய பா.ஜ அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திமுக முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று (நேற்று) வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : CM. K. Stalin , Consensus organizations must unite to raise the voice of social justice across the country: Chief Minister M K Stalin's request
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...