×

கரூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தை வரும் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழக மின்சார துறையில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரே ஆண்டில் ஒரு லட்சம்  மின் இணைப்புக்கான ஆணைகளை முதல்வர் விவசாயிகளுக்கு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக  2022-23ம் ஆண்டிற்கான 50 ஆயிரம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கப்படுமென சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் 11ம் தேதி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 50 ஆயிரம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே, ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு, தற்போது 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு என ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பை வழங்கி மகத்தான சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்தாண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. கரூரில் நடைபெறும் தொடக்க விழாவில் 20 ஆயிரம் விவசாயிகள் உத்தரவுகளை பெறுவதற்காக நேரில் கலந்து கொள்கின்றனர். மீதமுள்ள விவசாயிகளுக்கு படிப்படியாக கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karur ,Chief Minister ,M.K.Stalin , Free electricity connection scheme for 50,000 farmers in Karur district: CM M.K.Stalin to inaugurate on 11th
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்