×

126 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடியில் உபகரணங்கள்: நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலை பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் 2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும்” என்று கூறி இருந்தார். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் பொருட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 98 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 28 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 126 பள்ளிகளுக்கு தேவையான ஆய்வுக்கூட உபகரணங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வாங்கி வழங்கிட ஆதிதிராவிடர் நல இயக்குநர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநருக்கு அனுமதி அளித்தும் இதன் பொருட்டு, ரூ.3 கோடியே 15 லட்சம் நிதி ஒப்பளிப்பு  வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மாணாக்கரின் பங்களிப்பு அதிகரிப்பதுடன் செயல்முறை தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும். தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adi Dravidian ,Tribal High Schools Science Labs ,Tamil Nadu Govt , 126 Adi Dravidian and Tribal High Schools Science Labs Rs.3.15 Crore Equipment: Tamil Nadu Govt Order
× RELATED ஆதி திராவிடர் மக்கள் நலனுக்காக...