டிக்-டாக்கில் பிரபலமாகி சினிமாவில் நடிக்க சென்ற துணை நடிகையை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது: திருப்பூரில் பயங்கரம்

திருப்பூர்: திருப்பூரில் டிக்-டாக்கில் பிரபலமாகி சினிமாவில் நடிக்க சென்ற மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). பனியன் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி இதே பகுதியில் வசித்து வருகிறார். சித்ரா டிக்-டாக்,  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவது வழக்கம். இவரது வீடியோவுக்கு லைக், கமெண்ட்கள் குவிந்தன. இதனால் எந்த நேரமும் நடனம், டயலாக் என்று வீடியோவில் மூழ்கினார்.

இதனால் எரிச்சல் அடைந்த கணவர், மனைவியை கண்டித்தார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் மோகத்தை சித்ராவால் கைவிடமுடியவில்லை. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் சினிமாவில் நடிக்க ஆர்வத்தை தூண்டினர். இதற்காக அவர்களுடன் கணவன் எதிர்ப்பை மீறி சித்ரா சென்னை சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கி சினிமா வாய்ப்பை தேடி அலைந்தார். துணை நடிகை வாய்ப்பை தவிர பெரிய வாய்ப்பு அமையவில்லை. இதனையடுத்து சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு வெடித்தது.  

இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் சித்ராவின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்தில் காயத்துடன் சித்ரா இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து திருப்பூர் மத்திய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது சினிமாவில் நடிக்க சென்னை சென்றதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமிர்தலிங்கம், சித்ராவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அமிர்தலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: