புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மியால் கடன் சமையல் மாஸ்டர் தற்கொலை: செல்போனில் உருக்கமான தகவல்

புதுச்சேரி: திருக்கனூர் அடுத்த சோம்பட்டை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் அய்யனார் (29). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அய்யனார் புதுச்சேரி நகர பகுதியில் ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஓட்டல் அருகிலுள்ள 3வது மாடி அறையில் சக ஊழியருடன் தங்கியிருந்தார். வார விடுமுறையில் வீட்டிற்கு சென்று வருவாராம். சமீபகாலமாக அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில்  ஈடுபட்டதாக தெரிகிறது. குடும்பத்தினருக்கு தெரியாமல் அதிகளவில் பணத்தை இழந்த அய்யனார், கடன் வாங்கியும் விளையாடியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அய்யனார், தனது அறையில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தினர். அய்யனாரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், தற்கொலை செய்வதற்கு முன் அய்யனார், குடும்பத்தினருக்கு, என்னால் ஆன்லைன் ரம்மி விளையாடாமல் இருக்க முடியவில்லை. சிறிதளவு பணம் இருந்தால்கூட அதில்தான் எனது கவனம் செல்கிறது. இதனால் என் வாழ்க்கை வீணாகிவிட்டது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் குறுந்தகவல் அனுப்பியிருந்ததும், ஆன்லைன் ரம்மியில் அவர் ரூ.50  ஆயிரம் வரை இழந்த தகவலும் தெரியவந்துள்ளது.

Related Stories: