புதிய கலால் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வருக்கு எதிராக மாறிய தொழிலதிபர்: அரசு சாட்சியானதால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் அமல்படுத்தப்பட்டு வாபஸ் பெறப்பட்ட புதிய கலால் கொள்கை தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ இதுதொடர்பாக பலமுறை சோதனை நடத்தி உள்ளது. இந்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் தினேஷ் அரோரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொழில் அதிபர் தினேஷ் அரோராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதை சிபிஐ எதிர்க்கவில்லை. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிசோடியாவுக்கு எதிரான வழக்கில் அரோரா தங்களின் சாட்சியாக இருப்பார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

துணை முதல்வர் சிசோடியாவுக்கு எதிராக அரசின் சாட்சியாக அவர் மாறுவார் என்றும், தினேஷ் அரோரா விசாரணைக்கு ஒத்துழைத்து முக்கிய தகவல்களை அளித்ததாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரோரா அரசு சாட்சியாக மாறியது சிசோடியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அசாம் நீதிமன்றம் சம்மன்: இதற்கிடையே, அசாம் மாநில பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது கடந்த ஜூன் மாதம் சிசோடியா ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதுதொடர்பாக ஹிமந்தா கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வரும் 19ம் தேதி சிசோடியா நேரில் ஆஜராக நீதிமன்றம் நேற்று சம்மன் வழங்கியது. நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென்ற சிசோடியா மனு நிராகரிக்கப்பட்டது.

Related Stories: