கினியா கடற்பகுதியில் சிறை பிடிக்கப்பட்ட 16 இந்திய மாலுமிகள்: ஒன்றிய அரசு மீட்க கோரிக்கை

பனாஜி: சர்வதேச கடற்பகுதியில் சென்றபோது கினியா கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்திய மாலுமிகள் மற்றும் ஊழியர்களை ஒன்றிய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக நார்வேயில் இருந்து எம்டி ஹீரோயிக் என்ற கப்பல் சென்றது. இந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த மாலுமிகள், ஊழியர்கள் 16 பேர் உட்பட 26 பேர் இருந்தனர். சர்வதேச கடற்பகுதியில் சென்றபோது ஆகஸ்ட் 12ம் தேதி இந்த கப்பலை கினியா கடற்படையினர் தடுத்து நிறுத்தினார்கள். கினியாவில் உள்ள லுபா துறைமுகத்துக்கு கப்பல் எடுத்து செல்லப்பட்டது. கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் உட்பட 26 பேரை கினியா கடற்படை கைது செய்தது.

இந்நிலையில் மாலுமிகள் உள்ளிட்ட இந்தியர்கள் 16 பேரும் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தங்களை விடுவிக்கவும், இந்தியா அழைத்து வருவதற்கும் உதவி செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கப்பலில் 16 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 8 பேர், போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தலா ஒருவர் என 26 பேர் தொடர்ந்து மாலாபோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர்கள், மேலாளர்கள் கினியா அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்துவருவதாகவும், இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவு துறை அமைச்சகமும் எடுத்து வருவதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: