சினிமா பாடல் பயன்படுத்திய விவகாரம் காங். டிவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் உரிய அனுமதியின்றி கேஜிஎப்-2 திரைப்பட பாடலை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபயணத்தை ராகுல் நிறைவு செய்துள்ளார். இதனிடையே, ராகுலின் கர்நாடக நடைபயணத்தின் வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்படும் போது, அவற்றில் கன்னட திரைப்படமான கேஜிஎப்-2 படத்தின் இந்தி பதிப்பு பாடல் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ராகுல் உள்பட மூவர் மீது எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் காப்புரிமை மீறல் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த கர்நாடாக நீதிமன்றம் காப்புரிமை மீறலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்ரா பேரணி டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டது.

* இன்று முதல் மகாராஷ்டிரா

ராகுல் காந்தி தெலங்கானாவில் 15 நாள் நடைபயணத்தை முடித்து கொண்டு இன்று மகாராஷ்டிரா புறப்படுகிறார். இதையொட்டி, ஜூக்கல் தொகுதிக்குட்பட்ட மீனூரு கிராமத்தில் கட்சி கூட்டத்துக்கு அம்மாநில காங்கிரஸ் தலைமை ஏற்பாடு செய்துள்ளது. ராகுல் தெலங்கானாவில் 19 சட்டப்பேரவை, 7 மக்களவை தொகுதி என மொத்தம் 375 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டார்.

Related Stories: