×

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்; கிராசிங் ஸ்டேஷன் பணிகள் விரைவுபடுத்தப்படுமா?: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில்: நாகர்கோவில்  டவுன் ரயில் நிலையத்தில் கிராசிங் ஸ்டேஷன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்  என்று ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை - கொல்லம்  அனந்தபுரி ரயில் கடந்த அக்டோபர் 20ம் தேதி முதல் நாகர்கோவில் சந்திப்பு  ரயில்நிலையம் செல்லாமல் நாகர்கோவில் டவுண் நிலையத்தில் நின்று செல்லுமாறு  இயக்கப்பட்டு வருகிறது.

இது இந்த ரயில் நிலையம் வழியாக இயங்கும் இரண்டாவது  தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். முதல் ரயிலாக கடந்த 2017ம் ஆண்டு ஜூன்  மாதம் 15ம் தேதி முதல் திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரை இயங்கிவரும்  இன்டர்சிட்டி தினசரி ரயில் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரத்துக்கு  நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது. இதனால்   நாகர்கோவில் டவுண் ரயில்  நிலையம் தற்போது குமரி மாவட்ட மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறது.
 
நாகர்கோவில் டவுண் நிலையத்துக்கு அருகில் கிராசிங் நிலையமாக 19 கி.மீ  கடந்து இரணியல் ரயில் நிலையம் உள்ளது. மறுமார்க்கமாக  கிராசிங் நிலையமாக 16  கி.மீ தொலைவில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் கிராசிங் நிலையமாக உள்ளது.  இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே அதிக கி.மீ தூரம் சுமார் 30 கி.மீ  கிராசிங் வசதி இல்லாமல் உள்ள ஒரு வழி பாதை ஆகும். இதனால் ஆரல்வாய்மொழியில்  அனந்தபுரி ரயில் புறப்பட்டு விட்டால் நாகர்கோவில் டவுண் வந்து இரணியல்  செல்லும் வரை வேறு எந்த ரயிலும் சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை  இந்த மார்க்கத்தில் இயக்க முடியாது.

இந்த காரணத்தினால் ரயில்கள் அதிக  நேரம் நாகர்கோவில் சந்திப்பு, இரணியல், குழித்துறை, பாறசாலை ரயில்  நிலையத்தில் கிராசிங்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளி  பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சென்னைக்கு செல்லும் போது  நாகர்கோவில் டவுண் வழியாக வரும் போதும் இந்த பிரச்சனைக்காக கிராசிங் ஆக  வேண்டி நாகர்கோவில் சந்திப்பு வழியாகவும் இயக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

நாகர்கோவில்  டவுண் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற கன்னியாகுமரி -  திருவனந்தபுரம் மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் உட்படுத்தி  செயல்படுத்துவது என்று திட்டம் தீட்டப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு  திட்ட ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டு கன்னியாகுமரி -  திருவனந்தபுரம் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த  ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த  முயற்சியும் எடுக்கவில்லை.
 
இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தை  31-03-2010  பார்வையிட்ட அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் இ.அஹம்மது இந்த  ரயில் நிலையம் ஐந்து கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.  அந்த நிதியும் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கேரளாவில் உள்ள ரயில்  நிலையம் வளர்ச்சிக்கு மாற்றி விட்டனர் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர்  குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள்  சங்கத்தினர் கூறுகையில், ‘2015-16 ஆண்டு பட்ஜெட்டில் திருவனந்தபுரம்-  கன்னியாகுமரி இருவழிப் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம்  கோட்டம் நாகர்கோவில் டவுண் ரயில் நிலைய விரிவாக்க பணிகளை கைகழுவி விட்டு  இருவழி பாதை பணிகளை மேற்கொள்ளும் தெற்கு ரயில்வேயின் கட்டுமான துறை  பார்த்து கொள்ளும் என்று ஒதுங்கி விட்டது. பிறகு தெற்கு ரயில்வேயின்  கட்டுமான துறை பணிகளை தொடங்கியது. ஆரம்பகட்ட பணிகள் துவங்கி நடைமேடை  உயரத்தை அதிகரித்தல், நடைமேடை மேற்கூரை என ஒரு சில பணிகளை செய்து  முடித்தது.

பின்னர் பழைய இருப்பு பாதை தொழில்நுட்ப குறைபாடு இருக்கின்ற  காரணத்தால் புதிய பாதையை அமைத்து, அதில் ரயில்களை இயக்கி விட்டு பழைய  இருப்பு பாதையை அகற்றியது. ஆனால் இன்றுவரை பழைய பாதையை தொழில்நுட்ப  குறைபாட்டை சரி செய்து அமைக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் கிராசிங்  பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கிராசிங்  பணிகள் மெதுவாக நடைபெறுவதால் நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கப்படும்  ரயில்கள் 30 கி.மீ தூரத்துக்கு கிராசிங் இல்லாத காரணத்தால் பல்வேறு ரயில்  நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் நிலை உள்ளது. எனவே நாகர்கோவில் டவுண்  கிராசிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நாகர்கோவில் டவுண் ரயில்  நிலையத்தில் தற்போது மூன்று நடைமேடைகள் அமைக்கப்பட இருக்கிறது. கூடுதலாக  இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட வேண்டும்.

நாகர்கோவில் டவுண் ரயில் நிலைய  கிராசிங் பணிகள் நிறைவு பெற்று விட்டால் இந்த வழித்தடத்தில் இயங்கும்  அனைத்து ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு கால அட்டவணையில் பெரிய  மாற்றங்கள் எதிர்ப்பார்க்கலாம். இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் சந்திப்பு  ரயில் நிலையத்தில் நிலவும் இடநெருக்கடி வெகுவாக குறையும். இவ்வாறு குறையும்  போது நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் வாரம் மூன்று நாள்  ரயிலை தினசரி ரயிலாக இயக்க முடியும்’ என்றனர்.

Tags : Town Railway Station ,Nagarko ,Crossing Station ,Rail Passengers Association , Nagercoil Town Railway Station; Can Crossing Station Works Be Speeded Up?: Rail Passengers' Association Urges
× RELATED இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள்...