×

ஆழியார் புதிய ஆயக்கட்டு கிளை கால்வாய்களை முழுமையாக பராமரிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய  ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட டி.எம்.சி. தண்ணீர் கேரள பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. இந்த ஆண்டு குருவை நெல் சாகுபடி மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, கடந்த மே மாதம் 17ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
 
இந்த தண்ணீர் திறப்பு வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுயைில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், அம்பராம்பாளையம், வடக்கலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதியான பொள்ளாச்சி கால்வாய் மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்புக்கு முன்னதாக புதிய ஆயக்கட்டு பாசன பகுதிற்குட்பட்ட மெயின் கால்வாய் பகுதியில் பராமரிப்பு பணி நடந்துள்ளது. ஆனால், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் கடைமடை வரை செல்லும் கிளை கால்வாய்கள் முறையாக பராமரிக்கவில்லை.
 
இது குறித்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் 135 நாட்கள் வீதம், சுழற்சி முறையில் 75 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சுமார் 65 கி.மீ., மேல் சுற்றளவு தூரமுள்ள புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில், மெயின் கால்வாய்களில், அவ்வப்போது சீரமைப்பு பணி நடந்தாலும், கிளை கால்வாய்களில், அப்பணி முறையாக மேற்கொள்ளாமல் இருப்பது, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுக்கு முன்பு, குடிமராமத்து திட்டத்தின் கீழ், விவசாயிகள் மூலம் கிளை கால்வாய் பராமரிப்பு பணி நடந்துள்ளது. தற்போது அந்த திட்டமும் இல்லாததால், பொதுப்பணித்துறை மூலம் ஒதுக்கப்படும் தொகை போதுமானதாக இல்லாததால், கிளை கால்வாய்களை முழுமையாக பராமரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட கிளை கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை முழுமையாக சீர்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Ayakattu , Aliyar new Ayakattu branch canals should be fully maintained: farmers demand
× RELATED ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு