×

சின்னமனூர் பகுதியில் தக்காளி சாகுபடி பணி தீவிரம்

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாற்று பாசனம் மூலம் வருடம் இருபோகம் நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பாசனநீர் கண்மாய் மற்றும் குளங்களில் தேக்கப்படுவதால், கிணறுகளில் நீர்மட்டம் உயர்கிறது. இந்த கிணற்றுநீர் மூலம் வாழை, திராட்சை, தென்னை, ஆலைக்கரும்பு என பலதரப்பட்ட பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய நிலத்தில் காய்கறிகள் ஆங்காங்கே ஊடுபயிராகவும், தனி பயிராகவும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி பரவலாக செய்து வருவதால், ஆங்காங்கே உற்பத்தி அதிகரித்து வருகிறது. 70 நாட்களில் அறுவடைக்கு வரும் தக்காளி உற்பத்திக்கு ஒரு ஏக்கரில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.

உற்பத்தி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் தரம் பிரித்து சின்னமனூர் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழக, கேரள வியாபாரிகள் ஏலச்சந்தையில் தக்காளியை ஏலம் எடுத்து தங்களின் இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே தக்காளி உற்பத்தி அதிகளவில் இருப்பதால், ஒரு கிலோ 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சின்னமனூர் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தக்காளி சாகுபடி ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Chinnamanur , Tomato cultivation in Chinnamanur area is intensive
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி