தமிழ்நாடு அரசின் ஆதாயப் பங்கு தொகையின் வங்கி வரைவோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை: தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2021-22-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஆதாயப் பங்கு தொகையான 8 கோடியே 63 இலட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்க்கான வங்கி வரைவோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், வனத்துறை அமைச்சர்

ராமச்சந்திரன் , தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஆதாயப் பங்கு தொகையான 8 கோடியே 63 இலட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு 13.6.1974 முதல் செயல்பட்டு வருகிறது. இக்கழகம்  உற்பத்திதிறன் குறைந்த காப்பு காடுகள் மற்றும் சராசரி மழை பொழிவு குறைவாக உள்ள இடங்களில் உள்ள காப்பு காடுகளை குத்தகைக்கு எடுத்து அதில் முந்திரித் தோட்டங்களை எழுப்பி தொடர்ந்து பராமரித்து விற்பனை செய்தல், தைலமரத் தோட்டங்களை உற்பத்தி செய்து தொடர்ந்து பராமரித்து அறுவடை செய்து, கூழ்மர மற்றும் காகித ஆலை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்தல், வனப்பரப்புகளின் உற்பத்தி தன்மையை அதிகப்படுத்துவது, ஊரக வேலைவாய்ப்பு வழங்குவது, மண்வளப்பாதுகாப்பு மற்றும் ஊரக மக்களின் விறகு மரத் தேவையை பூர்த்தி செய்வது ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இக்கழகம் தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வருகிறது.

தற்போது 2021-2022 ஆம் ஆண்டில் 28 கோடியே 77 இலட்சத்து 51  ஆயிரத்து 112 ரூபாய் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் 30 சதவிகித ஆதாயப் பங்குத் தொகையான 8 கோடியே 63 இலட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வனத்துறை  அமைச்சர் ராமச்சந்திரன் இன்று வழங்கினார்.

    

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மற்றும்  தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் தலைவர்  மற்றும் மேலாண்மை இயக்குநர் யோகேஷ் சிங், ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: