×

நித்திரவிளை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஸ்லோ பாய்சன் கொடுத்து கல்லூரி மாணவி கொலையா?: கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டதாக திடுக் தகவல்

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மாணவி திடீரென உயிரிழந்த சம்பவத்தில், அவர் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை புளியறத்தலை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர். இவரது மகள் அபிதா (19), களியக்காவிளை பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி, முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் தங்கபாய் (51) நித்திரவிளை போலீசில் அளித்த புகாரில், ‘நித்திரவிளை பாணாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், 2 ஆண்டுகளாக எனது மகளை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி மறுத்துள்ளார். மனமுடைந்த எனது மகள் தனியறையில் முடங்கினார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி, ‘தனிமையாக சந்திக்க வேண்டும்’ என்று எனது மகளை அந்த வாலிபர் அழைத்துள்ளார்.

இதை நம்பி மகளும் சென்றார். அப்போது, ஏதோ விஷம் கொடுத்ததாக தெரிகிறது. அதிலிருந்துதான் உடல் நிலை பாதிக்கப்பட்டு எனது மகள் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அபிதாவின் உடல், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மாலையில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ‘இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் செய்வேன் என வாலிபர் உறுதி அளித்திருந்ததால், அபிதா நம்பியுள்ளார். ஆனால் காதல் விவகாரம், வாலிபரின் பெற்றோருக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதனால் அபிதாவுடன் பழகுவதை, வாலிபர் நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அபிதா, தட்டி கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 7ம் தேதி காதலனின் அழைப்பின் பேரில் சென்றபோது, தயாராக வைத்திருந்த குளிர்பானத்தை, காதலன் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகுதான் அபிதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிசோதனையில் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. ஸ்லோ பாய்சன் போன்ற திரவத்தை குடித்திருக்கலாம். அதுவே மெல்ல, மெல்ல கல்லீரலை பாதிப்படைய செய்திருக்கலாம். அபிதாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது’ என்றனர். இதனடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். காதலனிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Tags : Nithiravila , Was the college student killed by slow poison for forcing her to marry near Nithravila?: Shocking information that her liver was completely damaged.
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்