திருமணம் செய்வதாக கூறி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பிரசாந்த் (21). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர், அதே கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி, கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து அதிகாலை 5 மணியளவில் வெளியே சென்ற மாணவி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போதுதான், அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், மாணவியை சென்னைக்கு பேருந்தில் அழைத்து சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரசாந்த், அந்த மாணவியை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார். பெற்றோர் விசாரித்த போது, பிரசாந்த் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று தன்னுடன் உறவு வைத்து கொண்டதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிரசாந்தை நேற்று கைது செய்தனர்.

Related Stories: