நான் எதையும் வித்தியாசமாக செய்ய முயற்சிக்கவில்லை: நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் பேட்டி

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் முதல் இரு இடம்பிடித்த நியூசிலாந்து,இங்கிலாந்து, குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. வரும் 9ம் தேதி முதல் அரையிறுதியில் சிட்னியில் நியூசிலாந்து-பாகிஸ்தான், 9ம் தேதி அடிலெய்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடரில் நம்பர் ஒன் வீரரான சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார். நேற்று அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நாட்அவுட்டாக 25 பந்தில், 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன் விளாசினார். இந்த தொடரில் அவர் 5 போட்டியில், 3 அரை சதத்துடன் 225 ரன் எடுத்து 3வது இடத்தில் உள்ளார். சராசரி 75, 3 போட்டியில் நாட்அவுட்டாக இருந்துள்ளார்.

நேற்றைய போட்டிக்கு பின் அவர் அளித்த பேட்டி: நான் களமிறங்கும் பொழுது எனது திட்டம் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். நான் வேறு எதையும் புதிதாக வித்தியாசமாக முயற்சி செய்வது கிடையாது. நான் வலைப்பயிற்சியில் என்ன பயிற்சி செய்கிறேனோ அதைத்தான் விளையாடுகிறேன். அதிலிருந்து தான் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து நான் தொடர்ந்து ரன் சேர்க்கிறேன். இதைத்தான் நான் எப்பொழுதும் நினைப்பேன். இதை நான் தொடர்ந்து செய்வேன். நாங்கள் தகுதி பெற்ற பிறகு மக்கள் எங்களை தொடர்ந்து வெளியே வந்து ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: சூரியகுமார் யாதவ் அணிக்கு என்ன செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகச் சிறப்பான முறையில் தைரியமாக வெளியே வந்து விளையாடியது மூலம் மற்றவர்களின் ரன் அழுத்தத்தை குறைக்கிறார். அவருடைய திறன் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது இன்னொருவர் தன் விருப்பத்திற்கு விளையாட உதவியாக இருக்கிறது.

அவர் பேட் செய்கையில் மிகவும் நிதானமாகவும் இருக்கிறார். அவரிடம் நாங்கள் இதை எதிர்பார்த்தோம். அவர் தற்போது வேறு ஒரு லெவலுக்கு சென்று விட்டார், என்றார். மேலும் நாங்கள் அரை இறுதி விளையாட இருக்கும் அடிலெய்ட் மைதானத்தில் இந்த தொடரில் ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் அதற்குள்ளான சூழ்நிலைக்கு எங்களை விரைவாக தயார் செய்ய வேண்டும். இங்கிலாந்து ஒரு நல்ல அணி, எனவே போட்டி சிறந்ததாக அமையும்.  நாங்கள் இன்னொரு போட்டி நன்றாக விளையாடினால் இறுதிப்போட்டியில் இருப்போம், என்றார்.

ஏதாவது மேஜிக் செய்கிறார் டிராவிட் பாராட்டு: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  அளித்த பேட்டி: சூர்யகுமார் நேற்று நம்ப முடியாத ஆட்டம் ஆடினார். இதனால்தான் அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ந்து விளையாடுகிறார்.  இது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவர் விளையாடும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டாக உடல் தகுதி, மற்றும் ஆட்ட தகுதிக்காக நிறைய உழைத்திருக்கிறார். அவரது கடின உழைப்பிற்கான பலனைத் தான் தற்போது அனுபவித்து வருகிறார். அவர் எங்களுக்கு மிகவும் தனித்துவமான வீரர். அவர் இந்த மாதிரி ஃபார்மில் பேட்டிங் செய்வதை பார்ப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் ஏதாவது மேஜிக் செய்கிறார், என்றார்.

முடியாது என்று எப்பொழுதும் கூறாதே!: நடப்பு உலக கோப்பையில் முதல் 2 போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் தென்ஆப்ரிக்கா நேற்று கத்துக்குட்டி நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததுடன்,  வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதுபற்றி டுவிட்டரில் பாக். கேப்டன் பாபர் அசாம், ‘முடியாது என்று எப்பொழுதும் கூறாதே! அல்ஹம்து லில்லாஹ். எங்கள் அனைவரையும் உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள்,’ என பதிவிட்டுள்ளார்.

சூர்யா ஆட்டத்தை பார்த்து ரசியுங்கள்: இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் கூறுகையில், கோஹ்லி, கே.எல்.ராகுல், ரோகிசர்மா போன்ற வீரர்கள் பாரம்பரியமான முறையில் விளையாடக்கூடியவர்கள். ஆனால் சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர். அவரை பார்த்து ரசியுங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால் இதுபோன்ற வீரர்கள் உங்களுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியாவுக்கு இப்படி எப்போதும் அமைந்ததில்லை, என்றார்.

2024 உலக கோப்பைக்கு 12 அணிகள் தகுதி: அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் 2024ல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 55 போட்டி நடத்தப்படுகிறது. இந்த தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதோடு இந்த உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இரு குரூப்பிலும் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தரவரிசை அடிப்படையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. பிற 8 அணிகள் தகுதி சுற்றில் இருந்து தேர்வாகும்.

Related Stories: