காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு பிரபல கோயில்களில் நடை அடைப்பு

காஞ்சிபுரம்: சந்திர கிரகணத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற முக்கிய கோயில்களில் நடை சாத்தப்படுகிறது. தமிழகத்தில் நாளை சந்திர கிரகணம் காணப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் முக்கிய கோயில்களில் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்படும். தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிரகணம் முடிந்தபிறகு கோயில் சுத்தப்படுத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதன்படி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், முத்தீஸ்வரர், சித்தீஸ்வரர் கோயில், கைலாசநாதர், உலகளந்த பெருமாள், வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள் மற்றும் விளக்கோலி ெபருமாள் கோயில்களில் நாளை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நடை சாத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். சந்திர கிரகணம் முடிந்தபிறகு சிறப்பு பரிகார பூஜைகளுக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுபோல் மாவட்டத்தில் உள்ள 118 கோயில்களில் கிரகணத்தை முன்னிட்டு மேற்கண்ட நேரத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை 11 மணி முதல் இரவு 7 மணிவரை நடை அடைக்கப்படுகிறது. அதன்பிறகு கோயில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் 108 திவ்யதேசங்களில் 63வது தலமான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலிலும் நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் இரவு 7 மணிவரை நடை சாத்தப்படுகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நாளை மதியம் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இதன்பிறகு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயிலின் நடை சாத்தப்பட்டு, மறுநாள் காலையில்தான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோயில்கள் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இதன்பின்னர் சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7 மணிக்கு பிறகு கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்று  பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், நாளை  செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணி வரை மட்டுமே  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ‘’சந்திர கிரகணத்தையொட்டி நாளை 12 மணிக்கு கோயில்  நடை மூடப்பட்டு சந்திர கிரகணம் முடிவடைந்த பின்னர் பரிகார பூஜைகள் செய்து  இதன்பிறகு நடை திறக்கப்படும்’’ என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் நாளை மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்தபிறகு பல்வேறு சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: