×

ஸ்டீபன்சன் சாலை பாலம் ஜன. மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்: பால கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஸ்டீபன்சன் சாலை பாலம் ஜனவரி மாதத்திற்குள்  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னை மாநகராட்சி, ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும்  பால கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, சென்னை மாநகராட்சி அம்பேத்கர் சாலையையும், குக் சாலையையும் இணைக்கின்ற ஸ்டீபன்சன் சாலையில்  பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.  கடந்த பருவமழையின் போது இந்த சாலையை முழுவதும் துண்டிக்கப்பட்டிருந்தது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக வருகை தந்து இரண்டு முறை  பணிகளை பார்வையிட்டு சென்றார்கள்.

தற்போது இந்தப் பாலப்பணி நிறைவுறாததால் ஸ்டீபன்சன் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த  சாலையில்  ஓட்டேரி நல்லாவின் மழைநீர் செல்வதற்கு உண்டான  சிறிய பாலமும் ஏற்கனவே இருந்தது. தற்போது இந்த பாலக் கட்டுமான பணி நடைபெறுவதால் அந்த சிறிய பாலமும்  அகற்றப்பட்டுள்ளது. அதனால்  மழைநீர் மற்றும் கழிவுநீர் தடையின்றி செல்வதற்காக  இடிக்கப்பட்ட பால இடர்பாடுகளை களைந்து வழி ஏற்படுத்தியிருக்கின்றார்கள். மேலும் பருவ மழைக்கு முன்பு இந்த  சாலையில் அமைந்திருக்கின்ற ஓட்டேரி நல்லா தூர்வாரப்பட்டது. தற்போது மழை நின்ற நிலையில் பல பகுதிகளில் இருந்தும்   அடித்து வரப்பட்ட குப்பைக் கூளங்கள் அதிகமாக சேர்ந்திருக்கிறது.

முதலமைச்சர்  உத்தரவின்படி, நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் அவர்கள் இந்தப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கின்றார். இந்தப் பகுதியானது மாநகராட்சி மேயர் அவர்கள் சார்ந்திருக்கின்ற பகுதி என்பதால் அவரும்,  நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி அவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தாயகம் கவி அவர்களும்  தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இன்று நாங்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி அலுவலர்களோடு இந்த பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த பாலப்பணிகள் 70 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்று இருக்கின்றது. இதில் கர்டர்களை பொருத்துகின்ற பணி துவங்க வேண்டும். கனமழை காரணமாக கர்டர்கள் பொருத்துகின்ற பணி தாமதமானாலும் இதர கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.   

அடாது மழை பெய்தாலும் விடாது பணிகளை செய்து, அடிப்படை தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றுகின்ற  ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கின்ற ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  இந்த பாலப் பணிகளை பொறுத்த அளவில் வருகின்ற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற உறுதியை அதிகாரிகள் தந்திருக்கின்றார்கள்.  நாங்களும் தொடர்ந்து இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து கொண்டே இருப்போம். இந்த பாலம் ஜனவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் 12ஆம் தேதி  20 செ.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாக கூறினீர்கள். ஏற்கனவே கடந்த 5 நாட்களில்  40 செ.மீ. அளவிற்கு மழையை நாம் எதிர் கொண்டு இருக்கின்றோம். பருவ மழை மீண்டும் 9ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கின்றது. கடந்த ஆண்டு மழையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நின்றதோ அந்தப் பகுதிகளில் 70 சதவீதம் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் நிவர்த்தி செய்திருக்கின்றோம் கடந்த சில நாட்களில் பெய்த மழையின் போது தண்ணீர் தேங்கி நின்ற சில தாழ்வான பகுதிகளையும்  கணக்கெடுத்திருக்கின்றோம்.

அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை ஆங்காங்கே அப்படியே வைக்கச் சொல்லி இருக்கின்றோம். பருவ மழை அதிக அளவு பெய்யுமானால் அதற்கும் தேவையான கூடுதலான மின்மோட்டார்களை அமைப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றோம். வருகின்ற பருவமழையை ஏற்கனவே பெய்து முடித்த மழையை சமாளித்தது போல் வெற்றிகரமாக மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சமாளிப்போம் என்ற நம்பிக்கையோடு தயார் நிலையில் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Tags : Stephenson Road Bridge ,Minister ,Shekharbabu , Stephenson Road Bridge, Jan. Month, Minister Shekhar Babu
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...